தமிழ்நாடு அமைச்சரவையில் பெரியளவில் மாற்றங்களைச் செய்திருக்கிறது தமிழ்நாடு அரசு. உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி, நான்கு பேருக்கு புதிதாக அமைச்சரவையில் இடம், மூவர் நீக்கம் என பலரையும் இந்த மாற்றங்கள் புருவத்தை உயர்த்தியிருக்கிறது. இந்த முடிவை முதல்வர் ஸ்டாலின் உளவுத்துறை, பென் கம்பெனி என இரண்டு அமைப்புகள் கொடுத்த ரிப்போர்ட்டுகளின் அடிப்படையில் எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
அதுமட்டுமல்ல, அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனையும் இந்த மாற்றத்தில் முக்கியப் பங்கு இருக்கிறது என்கிறார்கள்.
நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், 40-க்கு 40 இடங்களையும் வெற்றிப் பெற்றிருந்தாலும், கடந்த சட்டமன்றத் தேர்தலோடு ஒப்பிடும்போது, எந்தெந்த சட்டமன்றத் தொகுதிகளிலெல்லாம் வாக்குகள் சரிந்திருக்கின்றன என்ற விவரங்களை எடுத்திருக்கிறது 'பென்' நிறுவனம்.
தவிர, 'கட்சியின் அடிமட்ட தொண்டர்களோடும் நிர்வாகிகளோடும் இணக்கமாக இருக்கிறார்களா, ஆட்சி நிர்வாகத்தில் தலையீடு இருக்கிறதா, கூட்டணிக் கட்சி நிர்வாகிகளிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள், அவர்கள் மீது ஏதாவது பொருளாதாரக் குற்றச்சாட்டுகள் உள்ளனவா...' எனப் பல்வேறு படிநிலைகளில், தி.மு.க-வின் 'பென்' நிறுவனம் ரி்ப்போர்ட் தயார் செய்ததாம். இதன் அடிப்படையில்தான் இந்த மாற்றம் நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
மாவட்ட செயலாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் அனுசரித்து போவதேயில்லை, குடும்ப உறுப்பினர்களின் தலையீடு அதிகமாக இருப்பதாக மூவர் மீதும் புகார்கள் தொடர்ந்து எழுந்துகொண்டே இருந்தன. இவை தவிர மூவரின் பதவியும் நீக்கப்பட்டதன் பின்னணி என்ன என்ற விசாரணையில் இறங்கினோம்.
``மனோ தங்கராஜிடம் பால்வளத்துறையைக் கொடுத்தபோது இதைப் பெரியளவில் எடுத்துச் செல்வார் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், பால்வளத்துறையை பொறுத்தவரை எதிர்பார்த்தளவு ஆவின் வளர்ச்சி இல்லை. தவிர மாவட்டத்திலும் சில பிரச்னைகள் இருப்பதாக தலைமைக்கு புகார் சென்றது.
மஸ்தானைப் பொறுத்தவரை, அமைச்சர் பொன்முடி தரப்புடன் தொடர்ந்து மோதல் போக்குடன் நடந்து கொண்டார் என்பதுதான் முக்கிய குற்றச்சாட்டாக இருந்தது. கட்சியிலும், அரசுப் பொறுப்புகளிலும் செஞ்சி மஸ்தான் தனது குடும்பத்தினருக்கும் தனக்கு நெருக்கமானவருக்கும்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தார். மரக்காணம் கள்ளச்சாரயம் விவகாரத்தில் மஸ்தானுக்கு நெருக்கமானவர்களின் பெயர்கள் அடிபட்டதும் இவரது பதவி பறிபோக முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
க.ராமச்சந்திரனைப் பொறுத்தவரை வனத்துறையில் இருந்தபோது இவரின் செயல்பாட்டில் திருப்தியாக இல்லை என்பதால்தான் துறையை மாற்றினார்கள். அப்போது ஓர் எச்சரிக்கையும் கொடுத்தப்பட்டது. ஆனால், அதை இவர் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. சுற்றுலாத்துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு சுற்றுலா வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருந்த அதை ராமச்சந்திரன் சரியாகக் கொண்டுபோகவில்லை எனப் பல்வேறு புகார்கள் எழுந்ததால் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது.
ஆனாலும், ராமச்சந்திரனின் சமுதாயத்துக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் அவருக்கு தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா பதவி கொடுக்கப்பட்டுள்ளது.” என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk