சமீபத்தில் இந்தியவின் மிக முக்கிய பேசுபொருளான திருப்பதி லட்டு விவகாரம், நாளுக்கு நாள் தீவிரமாக்கப்பட்டு வருகிறது. சந்திரபாபு நாயுடுவின் புகாரைத் தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய ஜெகன் மோகன் ரெட்டி, "இது குறித்து மத்திய அரசு உடனடியாக உண்மை கண்டறிய வேண்டும். இது தொடர்பாக பொய் செய்தி பரப்பியவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து ஆந்திரவின் துணை முதல்வர் பவன் கல்யாண், திருப்பதி கோயிலை மீண்டும் புனிதப்படுத்த வேண்டும் என தொடர் விரதம் இருக்கிறார். திருப்பதி தேவஸ்தானம் திருப்பதி லட்டு தயாரிக்கப்படும் சமயலறை உள்ளிட்டப் பகுதிகளில் ஹோமம் வளர்த்து சாந்தி பூஜை செய்தது.
அதைத் தொடர்ந்து ஆந்திராவின் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள், திருப்பதி வெங்கடாசலபதியை சாந்தப்படுத்த பாத யாத்திரை செய்யவிருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
அதே நேரம், கலப்படம் செய்த தேவஸ்தான நிர்வாகிகள், அதை அனுமதித்த டீலர்கள் என இதில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, இந்தப் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவராமல் அரசியல் செய்கிறார்கள் என்றும் பல்வேறு அரசியல் ஆளுமைகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில், நடிகையும் பா.ஜ.க நிர்வாகியுமான குஷ்பு தன் எக்ஸ் பக்கத்தில், ``திருப்பதி லட்டு பற்றி அதிகம் பேசப்படுகிறது. இந்து மதம் குறிவைக்கப்படும் போதெல்லாம், `கடந்து செல்லுங்கள்' என்கிற மனோபாவத்தைக் கொண்டிருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதை கவனிக்கிறேன்.
ஒரு குறிப்பிட்ட மதத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களிடம் கேட்கிறேன், இஸ்லாம், கிறிஸ்தவம் பற்றியும் இதே மொழியில் பேச உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? வேறு எந்த மதத்தை தவறாகப் பேசுவதானாலும் உங்கள் முதுகெலும்பு நடுங்குகிறதே... மதச்சார்பின்மை என்பது அனைத்து மதத்தையும் மதிக்க வேண்டும் என்பதுதான். அதில் பாரபட்சமாக இருக்க முடியாது.
நான் பிறப்பால் முஸ்லிம். இஸ்லாத்தை தொடர்ந்து பின்பற்றுபவள். அதே நேரம், இந்து கடவுள் மேல் பக்தியோடு இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்ட இந்து. எல்லா மதங்களும் எனக்கு ஒன்றுதான். இந்து மதத்தை அவமதிக்கவோ, சாதாரணமாக எடுத்துக் கொள்ளவோ கூடாது. எந்த விதமான அவமரியாதையும் பொறுத்துக் கொள்ளப்படாது. கலப்படம் செய்யப்பட்ட திருப்பதி லட்டு விவகாரம் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான இந்து மக்களின் உணர்வுகளையும், நம்பிக்கைகளையும் புண்படுத்தியிருகிறது. இதற்கு பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும் அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும். வெங்கடேசப் பெருமாள் பார்த்துக் கொண்டிருக்கிறார்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.