இந்தி திரைப்படங்களை தமிழில் ரீமேக் செய்யும் ஃபார்முலா பற்றி அதிகளவில் கேள்விப்பட்டிருப்போம்.
இப்போது ஒரு மெகா ஹிட் பாலிவுட் வெப் சீரிஸையும் தமிழில் ரீமேக் செய்திருக்கிறார்கள். ஆம், இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற 'பஞ்சாயத்' வெப் சீரிஸை தமிழில் ரீமேக் செய்திருக்கிறார்கள். இந்த பாலிவுட் வெப் சீரிஸ் அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தளத்தில் மூன்று சீசன்களாக வெளி வந்தது. நகைச்சுவைக்குப் பஞ்சமில்லாத இந்த வெப் சீரிஸை தமிழில் இயக்குநர் நாகா இயக்கியிருக்கிறார்.
'மர்மதேசம்' தொலைக்காட்சித் தொடர் 90ஸ் கிட்ஸுக்கு அவ்வளவு ஃபேவரைட். இந்த திகில் தொலைக்காட்சித் தொடரை இயக்கியது இயக்குநர் நாகாதான். இதுமட்டுமல்ல, 2010-ல் வெளியான 'ஆனந்தபுரத்து வீடு' படத்தின் இயக்குநரும் இவர்தான். இவர் ஒரு ஒளிப்பதிவாளரும்கூட. ஆம்... குறிப்பாக இந்த பாலிவுட் களம் இவருக்கு புதிதல்ல. Gawaahi படத்திற்கும், சல்மான் கான் நடித்த 'Patthar Ke Phool' படத்திற்கு ஒளிப்பதிவாளர் இவர்தான். ஒரு இடைவெளிக்குப் பிறகு டைரக்ஷனில் களமிறங்கி 'பஞ்சாயத்' வெப் சீரிஸை தமிழில் ரீமேக் செய்திருக்கிறார்.
'ஸ்டாண்ட் அப்' காமெடியனாக நமக்கு பரிச்சயமான அபிஷேக் குமார்தான் இந்த தமிழ் ரீமேக்கில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதாவது பஞ்சாயத் சீரிஸில் வரும் ஜித்தேந்திர குமார் கதாபாத்திரத்தில்தான் இவர் நடித்திருக்கிறார். இதன் பிறகு சின்னத்திரை எவர் க்ரீன் ஜோடியான சேத்தன், தேவதர்ஷினி ஆகியோரும் இந்த சீரிஸின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். நடிகர் சேத்தன் 'விடுதலை' , 'ஜமா' ஆகிய திரைப்படங்களில் தன் நடிப்பின் மூலம் வேறு ஒரு பரிமாணத்தை எட்டியிருக்கிறார். அதே போல இவரின் மனைவி தேவதர்ஷினியும் இதில் நடித்திருக்கிறார்.
இயக்குநர் நாகா இயக்கத்தில் வெளியான 'மர்மதேசம்' தொடரில் சேத்தனும் தேவதர்ஷினியும் இணைந்து நடித்திருந்தார்கள். அதன் பிறகு 'அத்திப்பூக்கள்' தொலைகாட்சி தொடரிலும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்தார்கள். ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் நாகா இயக்கத்தில் இதில் நடித்திருக்கிறார்கள். இம்முறை இவர்கள் இருவர் மட்டுமல்ல. இவர்களின் மகள் நியாதியும் சீரிஸில் நடித்திருக்கிறார்.
நாயகனுக்கு உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள ஒரு குக்கிராமத்தில் பஞ்சாயத் அதிகாரியாக பணிபுரிய வேலை கிடைக்கிறது. ஆனால் நாயகனுக்கு நகரம் கொடுத்த வசதியான வாழ்க்கையை விட்டு கிராமத்திற்குச் செல்வதற்குத் துளியும் மனமில்லாமல் இருக்கிறார். எம்.பி.ஏ படித்துவிட்டு நல்ல சம்பளம் பெற வேண்டும் என்பதுதான் நாயகனுக்கு லட்சியமாக இருக்கிறது. அதன் பிறகு தற்காலிமாக அந்த குக்கிராமத்திற்குச் செல்கிறார். அந்த குக்கிராமம் அவரை எப்படி வரவேற்கிறது? அங்கு எப்படியான மனிதர்களையும் பிரச்னைகளையும் சந்திக்கிறார் என்பதுதான் இந்த மூன்று சீசன் வெப் சீரிஸின் கதை.
நல்ல பொழுதுபோக்காக அம்சத்தைக் கொண்ட இந்த 'பஞ்சாயத்' வெப் சீரிஸின் தமிழ் ரீமேக்கான 'தலைவெட்டியான் பாளையம்' நாளை அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகவிருக்கிறது. எப்போதும் ஒரு படைப்பை ரீமேக் செய்யும் இயக்குநர்கள் முன்பு அதிகமான சவால்கள் இருக்கும். 'பஞ்சாயத்' வெப் சீரிஸை பார்த்தவர்கள், பார்க்காதவர்கள் என அனைவரின் எதிர்பார்ப்பையும் இந்த தமிழ் ரீமேக் பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
பஞ்சாயத் வெப் சீரிஸை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? தலைவெட்டியான் பாளையம் வெப் சீரிஸுல் நீ்ங்கள் எதிர்பார்ப்பது என்ன என்பதைக் கமென்ட்டில் பதிவிடுங்கள்!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX