திமுக முப்பெரும் விழா; சென்னையில் இன்று நடைபெறுகிறது!
1949-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் நாளன்று திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. தற்போது அந்தக் கட்சியின் பவள விழா நடைபெறவிருக்கிறது. இன்று மாலை 5 மணியளவில் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுகவின் பவள விழா மற்றும், பெரியார், அண்ணா, கட்சி உதயமான நாள் ஆகிய முப்பெரும் விழா ஆகியவை நடைபெறவிருக்கின்றன.
இந்த விழாவுக்கு தி.மு.க பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்குகிறார். தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர். சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான மா.சுப்பிரமணியன் வரவேற்றுப் பேசுகிறார்.
தொடர்ந்து ஏராளமானோருக்கு பல்வேறு வகையான விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன. இந்த விழாவில் அமைச்சர்கள், தி.மு.க எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்கின்றனர். ஒரு லட்சத்துக்கும் மேலானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரமாண்ட விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், ``நான்தான் திராவிடன் என்று நவில்கையில் தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!” - எனப் பாவேந்தர் பாடிய உணர்ச்சி தமிழ்நிலமெங்கும் வீச, தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது! தமிழுக்கு ஒரு இன்னலென்றால் தடுத்து நிறுத்தத் தம்பிமார் படை உள்ளதென்று தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ள உடன்பிறப்புகளானோம் நாம்! ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம்! இன்னும் ஆயிரமாண்டுகளுக்கான பாதையைச் செப்பனிடும் தொண்டியக்கம்! தமிழினத் தலைவர் கலைஞர் கட்டிக்காத்த இந்த இயக்கத்தில் பாடுபடும் அத்தனை பேருக்கும் இந்தத் தலைமைத் தொண்டனின் வாழ்த்துகள்! இன்று மாலை பவள விழா - முப்பெரும் விழாவில் உங்களைக் காணக் காத்திருக்கிறேன்…" எனப் பதிவிட்டிருக்கிறார்.