டைமன் லீக் போட்டி தொடர்பாக நீரஜ் சோப்ரா உருக்கமான பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
2024 ஆம் ஆண்டிற்கான டைமன் லீக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 87.86 மீ தூரத்திற்கு ஈட்டி எறிந்து இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார். நேற்றைய தினம் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நீரஜ் சோப்ரா 0.01 மீ வித்தியாசத்தில் தங்கப் பதகத்தை இழந்திருக்கிறார்.
இந்நிலையில் நீரஜ் சோப்ரா இதுதொடர்பாக பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், " 2024 சீசன் முடிவடையும் போது, இந்த ஆண்டில் நான் கற்றுக்கொண்ட அனைத்தையும் திரும்பிப் பார்க்கிறேன். முன்னேற்றம், பின்னடைவு, மனநிலை எனப் பலவற்றையும் திரும்பிப் பார்க்கிறேன். கடந்த திங்கட்கிழமை, பயிற்சி மேற்கொண்டபோது எனக்கு காயம் ஏற்பட்டது. எக்ஸ்ரேவில் எனது இடது கை விரல் முறிந்திருப்பது தெரிய வந்தது.
இது எனக்கு வலி மிகுந்த சவாலாக இருந்தது. எப்படியாவது இந்தத் தொடரில் பங்கேற்று விளையாடி விட வேண்டும் என்ற மன உறுதியுடன் இருந்தேன். எனது குழுவினரின் உதவியால் டைமண்ட் லீக் போட்டியில் பங்கேற்க முடிந்தது. இது இந்த ஆண்டின் கடைசி போட்டியாகும். எனது சீசனை டிராக்கில் முடிக்க விரும்பினேன்.
எனது சொந்த எதிர்பார்ப்புகளை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றாலும், நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். முழு உடல் தகுதியுடன் தொடர்ந்து முன்னேறி செல்லத் தயாராக இருக்கிறேன். எனக்கு ஊக்கமளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. 2024 என்னை ஒரு சிறந்த விளையாட்டு வீரராகவும், நபராகவும் மாற்றி இருக்கிறது. 2025ல் சந்திப்போம்” என நீரஜ் சோப்ரா பதிவிட்டிருக்கிறார்.