லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலும், பிற பகுதிகளிலும் வாக்கி டாக்கிகள் மற்றும் சோலார் கருவிகள் விடித்துச் சிதறியுள்ளன.
பேஜர்கள் வெடிப்பைத் தொடர்ந்து நடைபெற்ற கருவிகள் வெடிப்பில் 450 பேர் காயமடைந்ததாகவும், 20 பேர் கொல்லப்பட்டதாகவும் லெபனான் சுகாதாரத்துறைத் தெரிவித்திருக்கிறது.
லெபனான் - இஸ்ரேல் மோதல் எப்போது வேண்டுமானாலும் போராக வெடிக்கும் அபாயம் இருக்கிறது. கருவிகள் வெடித்ததில் ராணுவத்தினர் மட்டுமல்லாமல் லெபனான் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோஅவ் கேலட், "நாங்கள் போரில் ஒரு புதிய கட்டத்தின் தொடக்கத்தில் இருக்கிறோம் - அதற்கு தைரியம், உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சி தேவை." எனப் பேசியிருக்கிறார். ஆனால் பேஜர் வெடிப்புக் குறித்து எதுவும் பேசவில்லை.
நவீன சாதனங்கள் வந்தபிறகும் ஹிஸ்புல்லாஹ் மிலிட்டரி குழு பேஜர்களையே பயன்படுத்துகிறது. இதனைக் குறிவைத்து இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் ஒரே நேரத்தில் கருவிகளை வெடிக்க வைக்கும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக லெபனான் சந்தேகிக்கிறது.
முதல் நாள் நடைபெற்ற பேஜர் வெடிப்பில் 2,800 பேர் காயமடைந்தனர், 2 குழந்தைகள் உட்பட 12 பேர் மரணமடைந்துள்ளனர். இந்த சாதன வெடிப்புச் சம்பவங்களால் லெபனான் மக்கள் குழப்பமும் கோபமும் அடைந்துள்ளனர். பேஜர் வெடிப்பில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் பொது மக்களே என்கிறது ஏ.பி நியூஸ் வலைதளம்.
கடைகளிலும், பொது இடங்களிலும் இருந்த ஹிஸ்புல்லா குழுவினர், அருகில் இருந்தவர்கள், பேஜரை வைத்திருந்த அவர்களின் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள், தொண்டு பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக நிர்வாகிகள் ஹிஸ்புல்லா சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். இப்படிப் பலரிடம் பேஜர்கள் இருக்கின்றன.
பேஜர்கள், வாக்கி டாக்கிகள் மட்டுமல்லாமல் கையடக்க ரேடியோ கருவிகளும் வெடித்ததாகத் தெரிவிக்கிறது ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம்.
மக்கள் பயன்படுத்தும் சாதனங்களை போர்க்கருவியாக பயன்படுத்துவது குறித்து மிகுந்த வருத்தம் தெரிவித்திருக்கிறார் ஐ.நா மனித உரிமைகள் தலைவர் வோல்கர் துர்க். மக்களிடையே தீவிரமான அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவம் குறித்து தீவிரமான மற்றும் சுதந்திரமான விசாரணைத் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் காசாவில் நடத்திவரும் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹிஸ்புல்லா கடந்த ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி முதல் இஸ்ரேல் இராணுவத்தைத் தாக்கி வருகிறது. இதனால் நூற்றுக்கணக்கான லெபனானியர்களும் சில இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் - லெபனான் எல்லையில் இருந்து ஆயிரக்கணகான மக்கள் இடம்பெயர்ந்திருக்கின்றனர்.