டாக்டர் சந்தீப் கோஷ் கைது
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 9ம் தேதி 31 வயது பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலை தொடர்பான வழக்கை ஆரம்பத்தில் போலீஸார் விசாரித்து வந்தனர். அதன் பிறகு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து இவ்வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. படுகொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மாநகராட்சி ஊழியர் சஞ்சய் ராய் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
கொலை நடந்த போது ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் தலைவராக இருந்த டாக்டர் சந்தீப் கோஷ் மருத்துவமனையில் முறைகேட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு சி.பி.ஐ அதிகாரிகள் உண்மை கண்டறியும் சோதனை நடத்தியுள்ளனர். ஆனால் சஞ்சய் ராயிக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படவில்லை. அதற்கு சஞ்சய் ராய் ஒப்புக்கொள்ளவில்லை.
போலீஸ் அதிகாரி அபிஜித் மண்டல் கைது
திடீர் திருப்பமாக டாக்டர் சந்தீப் கோஷ் சி.பி.ஐயால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். பெண் டாக்டர் கொலைக்கு பிறகு மருத்துவமனையில் தடயங்களை அழிக்க முயற்சி செய்ததாக சி.பி.ஐ அவர் மீது குற்றம் சாட்டி இருக்கிறது. அதோடு ஆரம்பத்தில் இவ்வழக்கை விசாரித்த கொல்கத்தா தாலா போலீஸ் நிலைய பொறுப்பு போலீஸ் அதிகாரி அபிஜித் மண்டலையும் சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இரண்டு பேரும் தடயங்களை அழிக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அபிஜித் மண்டலிடம் இதற்கு முன்பு 8 முறை சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி இருந்தனர். கொலை நடந்தது குறித்த தகவல் போன் மூலம் கிடைத்தவுடன் அதனை போலீஸ் நிலைய டைரியில் குறித்து வைக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டார்.
FIR பதிய 14 மணி நேரம் தாமதம் ஏன்?
படுகொலை சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை இரவு 11.45 மணிக்குத்தான் பதிவு செய்யப்பட்டது. இவ்விவகாரத்தில் மிகவும் தாமதமாக செயல்பட்ட போலீஸ் அதிகாரி அபிஜித் செயல்பாடு, சி.பி.ஐ அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
சுப்ரீம் கோர்ட்டும் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய ஏன் 14 மணி நேரம் தாமதமானது என்று கேள்வி எழுப்பி இருந்தது. சி.பி.ஐ இவ்வழக்கை கையில் எடுத்து 36 நாள்கள் ஆகிவிட்ட நிலையில் இப்போதுதான் இவ்வழக்கில் மேலும் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். டாக்டர் சந்தீப் கோஷ் சி.பி.ஐ.யிடம் கொடுத்த வாக்குமூலத்தில் சி.பி.ஐக்கு சில முக்கிய தகவல்கள் கிடைத்தது. குறிப்பாக தாலா போலீஸ் அதிகாரி அபிஜித் மீது சந்தேகம் வருவதற்கு சந்தீப் கோஷ் கொடுத்த வாக்குமூலம் உதவியாக இருந்தது என்று சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
மம்தாபானர்ஜி வேண்டுகோள்
மருத்துவமனையில் பாதுகாப்பை மீறி மாநகராட்சி ஊழியர் சஞ்சய் ராய் சுதந்திரமாக சுற்றி இருக்கிறார். மருத்துவமனை பாதுகாப்பில் இருந்த போலீஸ் அதிகாரி அனுப் தத்திடம் இது குறித்து சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். முன்னதாக நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்களை நேரில் சந்தித்து பேசினார். அவர்களிடம் போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் அவர்கள் பேச்சுவார்த்தையை நேரடியாக ஒளிபரப்பு செய்தால் மட்டுமே பேச்சுவார்த்தையில் பங்கேற்போம் என்று கூறி அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வராமல் இருக்கின்றனர்.
சுப்ரீம் கோர்டும் டாக்டர்கள் பணிக்கு திரும்ப உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இரண்டு நாள்களில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாகாமல் பணிக்கு திரும்ப மம்தாபானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.