த்ரில்லர்களுக்குப் பேர்போன மலையாள சினிமாவிலிருந்து மற்றுமொரு அற்புதமான திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.
ஆழ்மன ரகசியங்களின் முடிச்சுகள் அவிழும்போது என்னவெல்லாம் நடக்கும்? `மனதின் ஆழத்தில் பாதுகாத்து வைத்த ஓர் ரகசியம் வெளியே வெளிச்சத்துக்கு வரும்போது கிடைக்கும் அதிர்ச்சிகள் நிஜத்தில் நம்மை நிலைகுலைய வைக்குமா... நெகிழ வைக்குமா..?' என்பதே இப்படத்தின் ஒன்லைன்.
எப்போதும் இயக்குநர்கள்- கதாசிரியர்கள் தனித்தனியாக தங்கள் ஆளுமையைப் பிரகடனப்படுத்துவது என்பது மலையாள சினிமாவில் மட்டுமே சாத்தியம். படத்தின் இயக்குநர் தின்ஜித் அய்யாதன் ஒரு VFX டைரக்டராக பல மலையாளப் படங்களில் வேலை பார்த்தவர். 2019-ல் `காக்ஷி:அம்மிணிபிள்ளா' என்ற படத்தை இயக்கியவர். ஐந்து வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ஆனால், படத்தின் மொத்த கிரெடிட்டையும் கதை, திரைக்கதையை எழுதியவருக்குக் கொடுத்திருக்கிறார்.
இப்படத்தின் கதை திரைக்கதையை எழுதியவர் வேறு யாருமல்ல... இப்படத்தின் ஒளிப்பதிவாளரான பாஹுல் ரமேஷ் தான். இப்படியொரு கதையை ஒரு சட்டகத்துக்குள் அடக்க முடியாது என்று சொல்வதைப்போல ஒரு துன்பியல் சம்பவத்தை பின்னணியாக வைத்து பல விஷயங்களைப் பேசி ஒரு வித்தியாசமான த்ரில்லர் அனுபவத்தை எழுத்தில் தந்திருக்கிறார்.
கதை இதுதான்!
ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற தந்தை அப்புபிள்ளா (விஜயராகவன்), அவரின் மகன் வனத்துறை அலுவலரான அஜய் சந்திரன் (ஆசிப் அலி) மட்டுமே வசிக்கும் காட்டின் விளிம்பில் இருக்கும் ஒரு பெரிய வீட்டுக்குப் புதிதாக ஒரு பெண் அபர்ணா (அபர்ணா பாலமுரளி) வருகிறாள். அவள் வேறு யாருமல்ல... அஜய் சந்திரன் மணமுடித்து அழைத்து வந்த பெண். ஏற்கெனவே திருமணமாகி மனைவியையும் மகனையும் இழந்தவன் தான் அஜய்சந்திரன். அபர்ணா அந்த வீட்டுக்கு வந்த முதல் நாளில் அப்புபிள்ளாவின் துப்பாக்கியும் காணாமல் போய்விடுகிறது. காவல்துறையில் சரண்டர் பண்ணச் சொல்லியிருந்த போதுதான் அது காணாமல் போன விவரம் தெரிய வருகிறது. அஜய் சந்திரனின் மகன் சச்சு காணாமல் போன வழக்கின் விசாரணையும் போய்க்கொண்டிருக்கும் நிலையில் வீட்டின் அருகே இருக்கும் காட்டுப் பகுதியில் ஒரு எலும்புக்கூட்டினைக் காவல்துறையினர் கண்டெடுக்கிறார்கள்.
இன்னொருபக்கம் அப்புபிள்ளாவின் நடவடிக்கையில் ஏதோ வித்தியாசம் இருப்பதை உணர்கிறாள் அபர்ணா. காணாமல் போன துப்பாக்கிக்கும், சச்சுவுக்கும் ஏதோ ஒருவகையில் அப்புபிள்ளா காரணமாக இருப்பாரோ என்று பயப்படுகிறாள். எப்போதும் மறதியுடனும் கோபத்துடனும் வளையவரும் அப்புபிள்ளாவைப் பற்றித் தெரிந்துகொள்ள முயற்சி செய்கிறாள். அந்த விஷயம் தெரிந்ததும் கோபமடைகிறார் அப்புபிள்ளா. தந்தை மீது சந்தேகப்படுவதை விரும்பாத மகன் அஜய் சந்திரனும் ஒரு கட்டத்தில் தான் மறைத்த சில விஷயங்களை அபர்ணாவுக்கு எடுத்துச் சொல்கிறான். ஜில்லிட வைக்கும் அந்தப் பின்னணிக்கதை என்ன? அந்த வீட்டில் என்ன நடந்தது..? இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது...? நாளை என்ன நடக்கும்..? போன்ற விஷயங்களுக்கு விடை சொல்கிறது 'கிஷ்கிந்தா காண்டம்'!
கிஷ்கிந்தா காண்டம்
வால்மீகி எழுதிய ராமாயணத்தில் ஆரண்ய காண்டத்துக்கு அடுத்து குரங்குகளை மையமாக வைத்து எழுதப்பட்ட நான்காவது காண்டம் தான் கிஷ்கிந்தா காண்டம். இந்தப் படத்தில் காட்டில் வசிக்கும் குரங்குகளால் ஏற்படும் ஒரு சிறு பிரச்னை, கதையின் போக்கில் எடுத்தாளப்பட்டிருக்கிறது. குரங்குக்கும் கதைக்கும் என்ன தொடர்பு என நாம் யோசித்துக் கொண்டிருக்கும்போது அந்த அதிர்ச்சிகரமான இடைவேளை வருகிறது. மெதுவாக, அதே சமயத்தில் progressive ஆக செல்லும் கதையின் போக்கு அந்த இடத்தில் நம்மை எழுந்து உட்கார வைக்கிறது. பிறகு மெல்ல ஆசுவாசப்படுத்தி வேறொரு தளத்தில் கதை பயணிக்கிறது.
மூன்று குரங்குகளைப் போல கண்கள், காதுகள், வாய் என மூடிக் கொண்டிருக்கும் மனிதர்களாக மூன்று பிரதான பாத்திரங்கள் வருவதை நம்மால் உணர முடிகிறது. ஒரு உண்மையை மையமாக வைத்து சுழலும் மூன்று பாத்திரங்களும், அதன் மன ஓட்டமும் பார்வையாளனுக்குக் கடத்தப்பட்டிருப்பது தேர்ந்த திரைமொழிக்கு உதாரணம். கிட்டத்தட்ட அபர்ணா பாலமுரளியின் இடத்திலிருந்துதான் நாம் மொத்த படத்தையும் அணுக ஆரம்பிக்கிறோம். படம் ஆரம்பிக்கும் நொடியிலிருந்து ஒவ்வொரு காட்சி கடக்கும்போதும் நாமும் உண்மையை நோக்கிச் செல்கிறோம்.
`ஏன் இந்த பெரியவர் இப்படி இருக்கிறார்?' என்ற அபர்ணாவின் அதே கேள்வி நமக்குள்ளும் எழுவது ஒன்றே திரைக்கதை நேர்த்திக்கு ஆகச் சிறந்த உதாரணம். `ஏன்..?', `எதற்கு..?', `எப்படி..?' என்று நமக்குள் எழும் எல்லாக் கேள்விகளுக்கும் க்ளைமாக்ஸில் விடை கிடைத்துவிடுகிறது. படம் முடிவடையும்போது ஒரு புதுவிதமான திரை அனுபவத்தைப் பார்வையாளனுக்கு திரைக்கதை நேர்த்தி தந்துவிடுகிறது.
அண்மையில் தேசிய விருதினைப் பெற்ற 'ஆட்டம்' படத்தைப்போலவே இப்படத்தின் திரைக்கதை அருமை. பாஹுல் ரமேஷை 'ஆட்டம்' படத்தின் இயக்குநர் ஆனந்த் ஏகர்ஸி சமூக வலைதளத்தில் ஏகத்துக்கும் ஏன் புகழ்ந்தார் என்பது தெளிவாக விளங்குகிறது. நுணுக்கமான பல காட்சிகள் படத்தில் உண்டு. அடிக்கடி காட்டுக்குள் விஜயராகவன் தீயிட்டு டாக்குமெண்ட்டுகளை அழிக்கும் காட்சி ஒரு உதாரணம். அதேபோல கானகத்தைக் காட்சிப்படுத்திய விதமும், ஒவ்வொரு பாத்திரங்களின் அமைதியான தன்மையும் பாசாங்கில்லாத ஒரு இயல்பான சஸ்பென்ஸ் உணர்வினைக் கொடுத்துவிடுகிறது. பிரதான பாத்திரங்களைத் தவிர மேஜர் ரவி, நிழல்கள் ரவி, ஜெகதி என பலரும் இயல்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
டெக்னிக்கலாக சூரஜின் எடிட்டிங், பாஹுல் சுரேஷின் ஒளிப்பதிவு இரண்டும் உலகத்தரத்தில் இருக்கின்றன. படத்தின் கலர் பேலட்டினை படம் முழுமைக்கும் பயன்படுத்திய விதம் அருமை. கிட்டத்தட்ட சஸ்பென்ஸ் உணர்வாக பேலட்டை பயன்படுத்திய விதத்தில் ஹாலிவுட்டில் 2013-ல் ரிலீஸான 'Prisioners' படத்தை இது நினைவுபடுத்தினாலும் கிஷ்கிந்தா காண்டத்தின் கதையும் திரைக்கதையும் முற்றிலும் வேறு. இரண்டு படத்திலும் குழந்தை காணாமல் போவது என்ற ஒன்லைன் பொதுவாக இருந்தாலும் இரண்டு படங்களிலும் குழந்தைகளுக்கு நிகழும் விஷயங்கள் முற்றிலும் வேறாகவே இருக்கின்றன.
சொல்லப்போனால் அந்தப் படத்தைவிட இது நேர்த்தியான படைப்பு. இப்படிப்பட்ட படத்துக்கு தற்போதைய கவன ஈர்ப்பு இசையமைப்பாளரான சுஷின் ஷியாம் இசையமைத்தால் நன்றாக இருக்குமே என்று படத்தின் துவக்கத்தில் நாம் யோசித்துக் கொண்டிருந்தால், கதைக்குள் செல்ல செல்ல இசையமைப்பாளர் முஜீப் மஜீத்தின் பின்னணி இசை படத்தின் ஆன்மாவாக செயல்பட்டிருக்கிறது. மான்டேஜ் காட்சிகள், பாடல்கள் என ஏதுமில்லாத, மெதுவாக நகரும் இப்படத்தின் விறுவிறுப்புக்கு உழைத்திருக்கிறார் முஜீப் மஜீத்.
கழுத்தொடிய வைக்கும், ட்விஸ்ட்டுக்காகவே வலிந்து எழுதப்பட்ட அதிரடி திருப்பக் காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை என்பது படத்தின் பலமும் பலவீனமும். மிக ஸ்லோவான கதை சொல்லல் பாணியைக் கொண்டிருப்பதால் 'Slow burn' படமாக சிலருக்கு போரடிக்கக் கூடும். ஆனால், `த்ருஷ்யம்' படங்களைவிட உண்மைக்கு நெருக்கமாகவும், தேர்ந்த திரைமொழியிலும் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படம் பலருக்கு நிச்சயம் பிடிக்கும். மொத்தத்தில் கிஷ்கிந்தா காண்டம்... வித்தியாசமான த்ரில்லர் சினிமாவாக உங்களை ஈர்க்கும்!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX