அமெரிக்கா, பிலடெல்பியாவில் உள்ள தேசிய அரசியலமைப்பு மையத்தில் செவ்வாய்க்கிழமை (இந்திய நேரப்படி புதன்) அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப் (குடியரசுக் கட்சி) மற்றும் கமலா ஹாரிஸ் (ஜனநாயகக் கட்சி) நேருக்கு நேர் விவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவாதத்தில் கமலா ஹாரிஸ் அணிந்திருந்த கம்மல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சமூக வலைத்தளங்களில் கமலாஹாரிஸ் அணிந்திருப்பது வெறும் கம்மல் இல்லை, ஹெட்ஃபோன் எனச் சிலர் (குறிப்பாக ட்ரம்ப் ஆதரவாளர்கள்) கருத்து தெரிவிக்கின்றனர்.
'நோவா ஹெச் 1 ஆடியோ இயர் ரிங்' என்ற காதணி கம்மலாகவும், ஹெட்ஃபோனாகவும் செயல்படும். இதைப் போன்ற ஒன்றைக் கமலா அணிந்து வந்து விவாதத்தின்போது வெளியிலிருந்து உதவிகளைப் பெற்று ஸ்கோர் செய்திருக்கிறார் எனக் குற்றம்சாட்டுகின்றனர்.
இதற்குப் பதிலளிக்கும் கமலா ஹாரிஸ் ஆதரவாளர்கள், அவர் 'டிஃபனி ஹார்ட்வேர் பியர்ல் இயர் ரிங்ஸ்' அணிந்திருந்ததாகத் தெரிவிக்கின்றனர். கமலாஹாரிஸ் கம்மலின் வடிவமைப்பு நோவா ஹெச் 1-ஐ விட டிஃபனி ஹார்ட்வேர் உடன் அதிகம் ஒத்துப்போவதையும் குறிப்பிடுகின்றனர். (நோவா ஹெச் 1-ல் ஒரு தண்டு தான் இருக்குமாம், கமலா அணிந்திருந்த கம்மலில் இரண்டு தண்டுகள் இருந்ததாம்)
கமலா ஹாரிஸும் முத்துக் கம்மலும்!
கமலா ஹாரிஸ் அடிக்கடி முத்துக் கம்மல் அல்லது முத்து பதித்த ஏதேனும் ஒரு அணிகலனை அணிவதுண்டு. இதற்கு ஒரு அரசியல் காரணமும் உண்டு!
ஆப்பிரிக்க அமெரிக்க மாணவர்கள் (பெண்கள்) அமைப்பான Alpha Kappa Alpha என்ற ஆப்பிரிக்க-அமெரிக்க மகளிர் அமைப்பில் கமலா ஹாரிஸ் உறுப்பினராக இருக்கிறார். அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் 3,60,000 பேர் இதில் உறுப்பினராக இருக்கின்றனர்.
AKA-வில் மாணவராக இணைந்தால், வாழ்நாள் முழுவதும் உறுப்பினர்தான். பல அரசியல் தலைவர்கள், சிவில் உரிமை ஆர்வலர்கள், இலக்கிய ஆளுமைகள் மற்றும் விஞ்ஞானிகள் இன்றும் உறுப்பினர்களாக இருக்கின்றனர். கமலா இன்றும் AKA-வின் முக்கிய கூட்டங்களில் கலந்துகொள்கிறார்.
அமைப்புடனான தங்களது உறவை வெளிப்படுத்த அவர்கள் முத்து அணிகலன்கள் அணிவதுண்டு. முத்து அவர்களின் அடையாளமாகக் கருதுகின்றனர். அத்துடன் ஆப்பிள்-பச்சை, சால்மன்-பிங் நிறங்களும் அந்த அமைப்பின் அடையாளம் தான். கமலா ஹாரிஸ் சில கூட்டங்களில் அந்த நிறங்களில் உடையணிவதைக் காணலாம்.
கமலா ஹாரிஸ் ஆல்பா கப்பா ஆல்பா அமைப்பின் மூலம் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!