பூமியிலிருந்து 402 கிலோமீட்டர் தூரத்தில் நொடிக்கு 8 கிலோமீட்டர் (மணிக்கு 28,807 கிலோமீட்டர்) வேகத்தில் பறக்கும் விண்கலம் 'சர்வதேச விண்வெளி நிலையம்'.
International Space Station உருவாக்கம்:
இதுவரை மனிதன் உருவாக்கியதிலேயே மிகப் பெரிய விண்கலம். ஒரு கால்பந்து மைதானத்தின் அளவு இருக்கும் என்கின்றனர். விண்வெளியிலேயே பாகங்கள் இணைக்கப்பட்டு இத்தனைப் பெரிய விண்கலம் உருவாகியிருக்கிறது.
விண்வெளி வீரர்களுக்கு வீடாகவும், பல ஆராய்ச்சிகள் நடைபெறும் ஆய்வகமாகவும் இருக்கிறது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா (The European Space Agency), ஜப்பான் மற்றும் கனடா நாடுகளின் விண்வெளி மையங்கள் இணைந்து இதனை உருவாக்கியிருக்கின்றனர்.
எதிர்காலத்தில் விண்வெளியில் மனித இனம் ஆதிக்கம் செலுத்துவதற்கான பல ஆராய்ச்சிகள் இங்கு நடைபெற்று வருகின்றன.
1998ம் ஆண்டு சர்வதேச விண்வெளி மைய கட்டுமானம் தொடங்கியது. ரஷ்யாவின் கட்டுப்பாட்டுத் தொகுதி முதன்முதலாக ஆர்பிட்டில் ஏவப்பட்டது. அதைத்தொடர்ந்து பிற நாடுகள் விண்வெளி நிலையத்தின் பல பகுதிகளை விண்வெளிக்கு ஏவின. இரண்டு ஆண்டுகளில் விண்வெளி வீரர்கள் தங்கும் அளவு தயாரானது. அன்று முதல் இன்று வரை விண்வெளியில் மனிதன் வாழாத நாள் கிடையாது. தற்போது 6 விண்வெளி வீரர்கள் மற்றும் சில பார்வையாளர்களும் தங்கிக்கொள்ளும் வசதியுடன் இருக்கிறது விண்வெளி நிலையம்.
விண்வெளி வீரர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்!
2011ம் ஆண்டு முழுமையான விண்வெளி நிலையம் உருவானது. 2021ம் ஆண்டுவரை சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் புதிய தொகுதிகள் அனுப்பப்பட்டன. விண்வெளி வீரர்கள் அவற்றைப் பொருத்தினர். பூமியிலிருந்து ஒரு விண்கலத்தை விண்வெளி நிலையத்துக்கு அனுப்ப 4 மணிநேரம்தான் ஆகுமாம். விண்வெளியில் வாழும்போது எலும்பு மற்றும் தசைகள் விரைவாகச் சுருங்கும் அபாயம் உள்ளது. இதனைத் தடுக்க விண்வெளி வீரர்கள் தினமும் 2 மணிநேரம் உடற்பயிற்சி செய்கின்றனர்.
தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தின் எடை 4,20,000 கிலோவுக்கு மேல். அத்தனை பெரிய உருவம் பூமியின் ஈர்ப்பு சக்தி மற்றும் சுற்றுப்பாதை இயக்கத்தைப் பயன்படுத்தி 90 நிமிடத்தில் பூமியையே சுற்றி வருகிறது. அதனுள் 6,7 மனிதர்கள் வேலை செய்துவருவதைக் கற்பனை செய்து பாருங்கள்! விண்ணில் பறக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தை நாம் பூமியிலிருந்தே பார்க்க முடியும். ஒரு நாள் விண்வெளி நிலையம் பயணிக்கும் தூரம், பூமியிலிருந்து சந்திரனுக்குச் சென்று திரும்பும் தூரத்துக்குச் சமமாகும்.
ஆராய்ச்சிகளுக்கான ஆய்வகம், மனிதர்கள் தங்கும் பகுதி எனப் பல பகுதிகள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கின்றன. சோலார் இறக்கைகள் (109 மீட்டர் நீளம்) மூலம் மின்சாரம் பெறப்படுகிறது. விண்வெளி நிலையத்தினுள் சாதாரணமாக இருக்கும் மனிதர்கள் விண்வெளி-உடை மாட்டிக்கொண்டு வெளியில் சென்று வேலை பார்க்க வேண்டிய சூழலில் அவர்களை அழைத்துச் செல்ல ரோபோ கைகள் உதவும்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளை வேறெங்கும் செய்ய முடியாது. சில ஆய்வுகள் மருத்துவத்துறையில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளன.