கடைசியாக சர்வதேசப் போட்டிகளில் ஆடி 5 ஆண்டுகளை கடந்துவிட்ட இந்திய வீரர்களை 'Uncapped' வீரராக தக்கவைத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ பழைய விதி ஒன்றை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை அணியில் தோனியை ஆட வைக்க வேண்டும் என்பதற்காகவே இப்படியொரு விதிமுறையை அறிமுகப்படுத்தியதாக கருத்துகள் பரவி வருகிறது. இந்த விதியால் சென்னை அணிக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது?
கடந்த ஜூலை 31 ஆம் தேதி ஐ.பி.எல் அணிகளின் நிர்வாகிகளுடன் பிசிசிஐ ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருந்தது. மெகா ஏலம் சார்ந்தும் எத்தனை வீரர்களை தக்கவைக்கலாம் என்பது சார்ந்தும் விவாதம் நீண்டிருக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில்தான் சென்னை அணியின் சார்பில், 'சர்வதேசப் போட்டிகளில் ஆடி 5 ஆண்டுகள் ஆகிவிட்ட வீரர்களை 'Uncapped' வீரர்களாக கருத வேண்டும்.' என்கிற விதிமுறையை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
'Uncapped' வீரர் விதிமுறை..
2021 வரைக்கும் ஐ.பி.எல் இல் அப்படியொரு விதிமுறை இருந்திருக்கிறது. 2021 இல்தான் அந்த விதிமுறையை விலக்கியிருக்கிறார்கள். 'எனக்கு அதைப் பற்றி ஒன்றுமே தெரியாது. நாங்கள் பிசிசிஐயிடம் எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை. பிசிசிஐ தான் எங்களிடம் 'Uncapped Player' விதிமுறையை மீண்டும் கொண்டு வரப்போவதாக சொன்னார்கள்.' என சென்னை அணியின் சிஇஓ வான காசி விஸ்வநாதன் வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.
எது எப்படியோ இரண்டு தரப்பிலுமே தோனியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆட வைக்க வேண்டும், அதேநேரத்தில் அதனால் அணிக்கும் பாதிப்பு இருக்கக்கூடாது என்பதை மனதில் வைத்துதான் 'Uncapped' வீரர் விதிமுறையை மீண்டும் கொண்டு வந்திருக்கிறார்கள். தோனி கடைசியாக 2019 ஆம் ஆண்டில்தான் சர்வதேசப் போட்டிகளில் ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை அணி எப்படி பலனடையும்?
சரி, இதனால் சென்னை அணி எப்படி பலனடையும்? மொத்தமாக 6 வீரர்களை ஒரு அணி தக்கவைத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ அறிவித்திருக்கிறது அல்லவா. இதில் முதல், இரண்டு, மூன்று என ஒவ்வொரு வாய்ப்பாக வரிசையாக தக்கவைக்கப்படும் வீரர்களுக்கு ஒவ்வொரு விதமான தொகை வழங்கப்படும். உதாரணமாக முதல் வாய்ப்பாக தக்கவைக்கப்படும் வீரருக்கு 18 கோடி ரூபாய் எனில் இரண்டாம் வாய்ப்பாக தக்கவைக்கப்படும் வீரருக்கு 14 கோடி ரூபாய் கொடுக்கப்படலாம். தக்கவைக்கப்படும் இந்த 6 வீரர்களில் அதிகபட்சமாக 2 Uncapped வீரர்களை தக்கவைக்கலாம் என விதிமுறை சொல்கிறது. இந்த Uncapped வீரருக்கான விலையாக 4 கோடி ரூபாயை நிர்ணயம் செய்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி பார்த்தால் Uncapped வீரர் விதிமுறையின் படி தோனியை வெறும் 4 கோடி ரூபாய் கொடுத்தே சென்னை அணியால் தக்கவைத்துக் கொள்ள முடியும். தோனி மாதிரியான ஒரு வீரரை 4 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைப்பதென்பது, 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகர் விஜய் 20 கோடி ரூபாய் வாங்கிவிட்டு ஒரு படத்தில் நடிப்பதை போன்றது.
2021 மெகா ஏலத்திற்கு முன்பாக வீரர்களை தக்கவைக்கையில் ஜடேஜாவுக்குதான் அதிக தொகை கிடைக்கும்படி தோனி செய்திருந்தார். ஜடேஜா 16 கோடி ரூபாய் பெறுகையில், தோனி 12 கோடி ரூபாய் மட்டுமே பெற்றுக்கொண்டார். இப்போதும் இந்த Uncapped வீரர் விதிமுறை என்பது குறைந்தபட்சமாக தோனியின் இசைவோடுதான் சென்னை அணியால் பிசிசிஐக்கு கோரிக்கையாக வைக்கப்பட்டிருக்கும்.
தோனி 42 வயதை கடந்துவிட்டார். அவர் முன்பைப் போல ஃபிட்டாக இல்லை. கால் முட்டியில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவரை கடந்த முறை போல 12 கோடியோ அல்லது அதற்கு மேலோ கொடுத்து தக்கவைத்துவிட்டு அவரால் அடுத்த 3 சீசனையும் ஆட முடியாமல் போனால் அணிக்குதான் பிரச்னை. இடையில் ரீப்ளேஸ்மெண்டாக சரியான வீரர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். இதை தோனியுமே விரும்பமாட்டார். இதனால் 4 கோடி ரூபாய் அளவிலேயே தக்கவைக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள். தோனி இன்னும் ஒரே ஒரு சீசனில் ஆடிவிட்டு விடைப்பெற்றாலும் அதனால் அணிக்கு பெரிய பிரச்னை இருக்காது. ஏனெனில் இந்த மெகா ஏலத்திலேயே சென்னை அணி அதற்கேற்ற மாதிரி வீரர்களை எடுத்து வைத்துக் கொள்ளும்.
இந்திய அணிக்காக உலகக்கோப்பைகளை வென்று கொடுத்த ஒரு மாபெரும் கேப்டனை ஐ.பி.எல் மாதிரியான பொழுதுபோக்கு லீகில் 'Uncapped' வீரராக ஆடவைக்க முயற்சி செய்வது தர்க்கரீதியாக சரியா என்கிற கேள்வி மட்டும்தான் இப்போது தொக்கி நிற்கிறது.