கேரளாவில் 2017-ல் பிரபல நடிகைக்கு பிரபல நடிகரால் ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, Women in Cinema Collective-ன் கோரிக்கையின் பேரில் மலையாள திரையுலகில் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் அதே ஆண்டு குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த ஹேமா கமிட்டி சில பரிந்துரைகளுடன் ஆய்வறிக்கையை 2019-லேயே அப்போதைய முதல்வர் பினராயி விஜயனிடம் சமர்ப்பித்தபோதிலும், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக வெளியிடப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், மலையாள ஊடகங்கள் சில, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அந்த அறிக்கையைப் பெற்று வெளியிட்டது. அதைத்தொடர்ந்து, மலையாள திரையுலகின் மிக முக்கிய ஆண் இயக்குநர்கள், நடிகர்கள் உள்பட பலர் மீது பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் புகார்கள் குவிந்தன. பின்னர், இதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவற்றை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது. மறுபக்கம், ஹேமா கமிட்டி அறிக்கை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கேரளா உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் குவிந்தன.
அவற்றை விசாரிக்க நீதிபதிகள் ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியார், சி.எஸ்.சுதா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது. இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை கேரளா உயர் நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது. இதில், மாநில அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் (ஏஜி) கோபாலகிருஷ்ண குருப் பங்கேற்றார். அப்போது, ``2019-லேயே அறிக்கை கிடைத்தும் மாநில அரசு ஏன் இதில் செயல்படாமல் இருந்தது?'' என நீதிபதி ஜெயசங்கரன் நம்பியார் கேள்விகேட்டபோது, ``அறிக்கையை வெளியிடக் கூடாது என்று குழு பரிந்துரைத்ததால்தான்" என்ற பதிலை கோபாலகிருஷ்ண குருப் வெளிப்படுத்தினார்.
அதைத்தொடர்ந்து நீதிமன்ற அமர்வு, ``மாநில அரசு நடவடிக்கை எடுக்காதது அதிர்ச்சியளிக்கிறது. கமிட்டியில் பேசிய பெண்களின் ரகசியத்தன்மையை உறுதிப்படுத்துவது முக்கியம்தான். ஏன் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கூட தனியுரிமைக்கு உரிமை உண்டு. ஆனால், பிரச்னைகள் இருப்பது தெரியவரும்போது இவற்றையெல்லாம் தள்ளிவைத்துவிட்டு அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? இதுவரை அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நடவடிக்கை எடுக்கவேண்டியது அரசின் கடமையல்லவா... எப்.ஐ.ஆர் பதிவு செய்யாதது உள்பட மாநில அரசின் செயலற்ற தன்மை கவலையளிக்கிறது. உங்களிடம் அறிக்கை இருந்தது. அதை, 2020-ல் டிஜிபி-யிடம் அறிக்கையை நீங்கள் ஒப்படைத்தீர்கள். ஆனால், டிஜிபி இதில் எதுவும் செய்யவில்லையா?" என்று கேள்வியெழுப்பியது.
அதற்கு, ``நடந்த நிகழ்வுகளை மட்டுமே அறிக்கை விவரிக்கிறது. வேறு எந்த விவரமும் அறிக்கையில் சேர்க்கப்படவில்லை. அதோடு, எந்த விவரமும் வெளியிடப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தின் பேரில் அளிக்கப்பட்ட அறிக்கை அது" என்று கோபாலகிருஷ்ண குருப் கூறினார்.
இந்தப் பதிலை ஏற்காத நீதிமன்ற அமர்வு, ``அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்ட குற்றங்கள்மீது தேவையான நடவடிக்கைகளை நீங்கள் எடுக்கலாம். பாதிக்கப்பட்டவர் தரப்பு இதை விசாரிக்க ஆர்வம் காட்டவில்லை என்றால், நீங்கள் அதை கைவிடலாம். இருப்பினும், குறைந்தபட்சமாக சில நடவடிக்கைகளாவது எடுக்கப்பட்டிருக்க வேண்டும். நான்கு ஆண்டுகளாக அறிக்கையில் சும்மா இருந்ததைத் தவிர நீங்கள் வேறெதுவும் செய்யவில்லை.
எனவே, இந்த அறிக்கையின் நகலை தற்போது பாலியல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். அதோடு, என்னென்ன குற்றங்கள் தெரியவந்தன, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றிய அறிக்கை ஓணம் விடுமுறைக்குப் பிறகு எங்களுக்கு வர வேண்டும். அதன்பிறகு சிறப்பு விசாரணை குழுவின் நடவடிக்கை என்னவென்பதைப் பார்ப்போம். அதற்குள், அவசரமாக செயல்படுமாறு சிறப்பு விசாரணை குழுவுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது" என்று கூறியது.
மேலும், திரைத்துறை மட்டுமல்லாது பொதுவாக பெண்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகள், துன்புறுத்தல்களுக்கெதிரான நடவடிக்கைகள் குறித்து கேள்வியெழுப்பிய நீதிபதி ஜெயசங்கரன் நம்பியார், ``சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைத் தீர்க்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்? தெரிந்தோ தெரியாமலோ இந்த சமூகத்தில் பெண்களுக்கு எதிரான பாரபட்சம் வரலாறாக தொடர்கிறது. இந்த மனநிலை மாறவேண்டும். ஆனால், இந்த மாற்றத்தை மக்கள் நிகழ்த்தினால் மட்டுமே நடக்கும்" என்றார்.