ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த செஸ் வீரர்கள் கலந்துகொண்டனர். இந்தப் போட்டியின் ஆடவர் பிரிவின் இறுதிச் சுற்றில் இந்தியா அணி சுலோவேனியாவுடன் மோதியது. அதில், முதல் போட்டியில், விளாடிமிர் ஃபெடோசெவை 48-வது காய் நகர்த்தலின் போது இந்தியாவின் டி. குகேஷ் வீழ்த்தினார்.
தொடர்ந்து ஆர்.பிரக்ஞானந்தா, ஆன்டன் டெம்சென்கோவுடன் மோதி, 53-வது காய் நகர்த்தலின்போது வெற்றி பெற்றார். மூன்றாவதாக இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி 49-வது காய் நகர்த்தலின்போது சுபெல்ஜ் ஜானைத் தோற்கடித்தார். கடைசி ஆட்டத்தில் செபெனிக் மாடேஜுடன் விதித் குஜராத்தி மோதினார். விறுவிறுப்பாகச் சென்ற இந்த ஆட்டத்தில், 59-வது காய் நகர்த்தலின்போது போட்டி டிராவில் முடிந்தது.
முடிவில் இந்திய அணி 3.5 - 0.5 என்ற கணக்கில் சுலோவேனியாவைத் தோற்கடித்தது. 11 சுற்றுகளின் முடிவில் இந்திய அணி 21 புள்ளிகளைக் குவித்து முதலிடம் பெற்றுத் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது.
அதே போல, மகளிர் பிரிவிலும் இந்திய மகளிர் அணியின் சார்பில் விளையாடிய ஹரிகா துரோணவல்லி, திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால் ஆகியோர் வெற்றி பெற்றனர். ஆர்.வைஷாலியின் ஆட்டம் ட்ரா ஆகவே, இறுதிப் போட்டியில் அஜர்பைஜானை 3.5 - 0.5 என்ற கணக்கில் தோற்கடித்து, 19 புள்ளிகளுடன் இந்திய செஸ் மகளிர் அணி முதலிடத்தைக் கைப்பற்றியது.
செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியாவின் ஆடவர், மகளிர் அணிகள் தங்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். 2014-ம் ஆண்டும், அதைத் தொடர்ந்து, 2022-ம் ஆண்டும் இந்தியா அணி வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், "தொடர்ந்து இந்தியா உயர்ந்துகொண்டே போகிறது... நமது செஸ் சாம்பியன்களின் அயராத அர்ப்பணிப்பும், எல்லை தாண்டி தேசத்துக்குப் பெருமை சேர்த்ததைக் காண்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வரலாற்றுச் சாதனை புரிந்த இந்திய அணிக்கு வாழ்த்துகள்" எனப் பாராட்டிப் பதிவிட்டிருக்கிறார்.
பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.