விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் தீவன நிறுவனத்தில், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பீமாண்டாவி என்ற முதியவர் பணியாற்றி வந்திருக்கிறார். அவருடன் 19 மற்றும் 20 வயதுடைய இரண்டு பேரன்களும் பணியாற்றி வந்திருக்கின்றனர். இவர்கள் மூவரும் செப்டம்பர் 6-ம் தேதி இரவு தங்களின் சொந்த ஊருக்குச் செல்வதற்காக, விழுப்புரத்தில் இருந்து சென்னை செல்லும் தமிழக அரசுப் பேருந்தில் பயணம் செய்திருக்கின்றனர்.
அந்தப் பேருந்து செங்கல்பட்டு அருகே சென்று கொண்டிருந்தபோது, பீமாண்டாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து ஒருசில விநாடிகளில், ஓடிக் கொண்டிருந்த அந்த பேருந்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். தங்களுடன் சிரித்து பேசிக் கொண்டு வந்த தாத்தா திடீரென உயிரிழந்ததைப் பார்த்த அவரது பேரன்கள், என்ன செய்வதென்று தெரியாமல் கதறி அழுதனர். உடனே ஓட்டுனர் ராம்குமாரும், நடத்துனர் ரசூல் நகுமானும் செங்கல்பட்டு மேம்பாலத்தின் அருகில் பேருந்தை நிறுத்தியிருக்கின்றனர்.
அடுத்து அவர்கள் செய்ததுதான் கொடூரத்தின் உச்சம். இழப்பு கொடுத்த அதிர்ச்சியிலும், தாள முடியாத துயரத்திலும் இருந்த மொழி தெரியாத அந்த இளைஞர்களை, அந்த இரவில் சடலத்துடன் இறக்கி விட்டுவிட்டுச் சென்று விட்டனர். நீண்ட நேரமாக தாத்தாவின் சடலத்துடன் நடு ரோட்டில் அழுது கொண்டு நின்றிருந்தவர்களிடம், அந்த வழியே சென்ற சிலர் விசாரித்திருக்கின்றனர். அதன்பிறகு அவர்களின் உதவியுடன், ஆம்புலன்ஸ் மூலம் முதியவரின் சடலத்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர்.
மருத்துவமனை கொடுத்த தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த செங்கல்பட்டு போலீஸார், பொறுப்பும் மனிதாபிமானமுமின்றி நடந்து கொண்ட ஓட்டுனர் ராம்குமார் மற்றும் நடத்துனர் ரசூல் ரகுமான் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு பரிந்துரைத்தனர். அதையடுத்து தற்காலிக ஓட்டுனரான ராம்குமாரை பணியிலிருந்து நீக்கியதுடன், நடத்துனர் ரசூல் ரகுமானை சஸ்பெண்ட் செய்திருக்கிறார் விழுப்புரம் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் குணசேகரன்.