BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday, 27 September 2024

``இந்தி திணிப்பு முதல் நீட் வரை போராட்டம்" - பாப்பம்மாள் பாட்டி மறைவிற்கு மோடி, ஸ்டாலின் பதிவு!

கோவை சேர்ந்த 108 வயது இயற்கை விவசாயி பாப்பம்மாள் பாட்டி நேற்று காலமானார்.

தன் கணவர் இறந்தப்பிறகு, விவசாயத்தைக் கற்றுக்கொண்ட பாட்டி, அவரது கடைசி மூச்சு வரையிலும் இயற்கை விவசாயம் செய்து வந்திருக்கிறார். இவருக்கு மத்திய அரசு 2021-ம் ஆண்டு பத்மஶ்ரீ விருதை வழங்கியது. இவர், தான் விவசாயம் கற்ற பல்கலைக்கழகத்திலேயே விவாதக்குழு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். மேலும் இவர் திமுகவின் பல போராட்டங்கள், மாநாடுகள் ஆகியவற்றிலும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 17-ம் தேதி நடந்த திமுக பவள விழா மாநாட்டில் இவருக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது.

இவரது மறைவையொட்டி பிரதமர் தொடங்கி முதலமைச்சர் வரை இரங்கல்களை தெரிவித்து உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி பாப்பம்மாள் பாட்டி குறித்து எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது,

"பாப்பம்மாள் ஜி மறைவினால் மிகவும் வருந்துகிறேன். அவர் இயற்கை விவசாயத்தில் மிக முக்கிய பங்காற்றி உள்ளார். அவரது பணிவு மற்றும் அன்பினால் மக்கள் அவரின்பால் ஈர்க்கப்பட்டனர். அவரது குடும்பத்தினர் மற்றும் நல விரும்பிகளுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி" என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"கழக முன்னோடியும் - கடந்த 17-ஆம் நாள் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்றவருமான திருமிகு. பாப்பம்மாள் அவர்கள் 108 அகவையில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தியறிந்து கலங்கினேன்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் மீதும் - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீதும் பற்றுக் கொண்டு, கழகம் தொடங்கப்பட்ட நாள் முதல் தன்னை இயக்கத்துக்காக அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றியவர்.

1965-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டம் தொடங்கி, தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காக்க நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வரை அத்தனை போராட்டக்களங்களையும் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டவர் அவர்.

1959-ஆம் ஆண்டு தேக்கம்பட்டி ஊராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருமிகு. பாப்பம்மாள் அவர்கள், 1964-இல் காரமடை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினராகவும், பின்னர் தேக்கம்பட்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் பொறுப்பேற்று பணியாற்றினார்.

1970-ஆம் ஆண்டு தொடங்கி 45 ஆண்டுகாலம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக உழவர் விவாதக்குழு உறுப்பினராகச் செயல்பட்டார்.

1965-ஆம் ஆண்டிலேயே மாதர் சங்கத் தலைவராகச் செயல்பட்டு, கிராமப் பெண்களின் முன்னேற்றத்துக்கான சமூகப் பணிகளை மேற்கொண்டார்.

தனது இறுதிமூச்சு வரையில், சுறுசுறுப்பாக வயலில் இறங்கி வேளாண் பணிகள் செய்து வந்தவர் திருமிகு. பாப்பம்மாள் அவர்கள்.

திருமிகு. பாப்பம்மாள் அவர்களின் வாழ்வையும் தொண்டையும் போற்றும் வகையில் ஒன்றிய அரசு சார்பாக கடந்த 2021-ஆம் ஆண்டு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது. அப்போது, “உற்சாகத்துடனும், கொள்கை உணர்வோடும் எப்பொழுதும் புன்னகை மாறாத பாப்பம்மாள் பாட்டி நமக்கெல்லாம் உந்துசக்தி!" என்று அவரை வாழ்த்தினேன்.

கழக முப்பெரும் விழாவில், “ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் அடையாளம்" என அவரை மனம் நெகிழப் பாராட்டி மகிழ்ந்திருந்தேன். ஆனால் இன்று சொல்லொணாத் துயரத்தில் நம்மையெல்லாம் ஆழ்த்தி விட்டு அவர் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார்.

அண்ணா அறிவாலயத்திலும், எனது இல்லத்திலும் திருமிகு. பாப்பம்மாள் அவர்களைச் சந்தித்து உரையாடிய ஒவ்வொரு தருணமும் என் நெஞ்சில் எப்போதும் நீங்காமல் பசுமையாக இருக்கும்.

என் குடும்பத்தில் ஒருவரைப் பிரிந்த வலியுடன் தவிக்கிறேன். திருமிகு. பாப்பம்மாள் அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், கழக உடன்பிறப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

பாப்பம்மாள் பாட்டி மறைவு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் எக்ஸ் பதிவு...

"கழகம் தொடங்கிய காலத்திலேயே உறுப்பினராகி, கழக பவள விழா ஆண்டின் முப்பெரும் விழாவில், பெரியார் விருது பெற்ற கோவை தேக்கம்பட்டியைச் சேர்ந்த கழக மூத்த முன்னோடி பாப்பம்மாள் பாட்டி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து துயருற்றோம்.

கழகத்தின் 15 மாநில மாநாடுகளில் பங்கேற்றவர். இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கி அனைத்து போராட்டங்களிலும் களம் கண்டவர்.

நீட் விலக்கை வலியுறுத்தி கடந்தாண்டு நம் இளைஞரணி நடத்திய கையெழுத்து இயக்கம் வரை கொள்கை உறுதியோடு களத்தில் நின்ற பாப்பம்மாள் பாட்டியின் அர்ப்பணிப்பு, போற்றுதலுக்குரியது. அவரின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் - நண்பர்களுக்கு என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்".



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies