நம் நாட்டில் சட்டரீதியான நிறுவனங்கள் உருவாக்கப்பட்டதற்கு முக்கியமான காரணமே, எந்தவொரு தனிநபருக்கோ, தொழில் நிறுவனத்துக்கோ ஒரு தலைப்பட்சமாக எந்த முடிவும் எடுக்கப்படாமல் நேர்மையாக நடக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (NCLT) நடவடிக்கைகளைப் பார்த்தால், குறிப்பிட்ட ஒரு நிறுவனமே திரும்பத் திரும்ப பயனடைகிறதோ என்கிற கேள்வியே அனைவருக்கும் எழுகிறது.
இந்தத் தீர்ப்பாயம் நிறுவப்பட்டதன் நோக்கம் என்ன? திவால் நிலைக்குச் சென்ற நிறுவனங்களை நல்ல விலைக்கு விற்று, வங்கிகளுக்குச் சேர வேண்டிய கடனைத் திரும்பப் பெற்றுத் தரத்தான். அப்படிச் செய்யும்போது அதாவது, திவாலான ஒரு நிறுவனத்தை விற்கும்போது பல்வேறு தொழில் நிறுவனங்கள் அதை வாங்க முன்வந்தாலும், அதானி குழுமத்துக்கே அடுத்தடுத்து விற்கப்படுவதன் மர்மம் என்ன என்பதுதான் இப்போது மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது.
இது தொடர்பாக, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் வெளியிட்ட தகவல்களைப் பார்ப்போம். அதானி குழுமமானது இதுவரை திவாலான 10 தொழில் நிறுவனங்களை என்.சி.எல்.டி அமைப்பிடம் இருந்து வாங்கி இருக்கிறது. அதுவும் 74% தள்ளுபடி விலையில். உதாரணமாக, ரூ.15,190 கோடி மதிப்புள்ள லாங்கோ அமர்காங்டெக் பவர் நிறுவனத்தை 73% தள்ளுபடியில் வெறும் ரூ.4,101 கோடிக்கு வாங்கியது அதானி பவர். தவிர, ரூ.12,300 கோடி மதிப்புள்ள கோஸ்டல் எனர்ஜென் லிமிடெட் நிறுவனத்தை 72% தள்ளுபடியில் ரூ.3,500 கோடிக்கு வாங்கியது. மேலும், ரூ.12,013 கோடி மதிப்புள்ள எஸ்.ஆர் பவர் எம்.பி நிறுவனத்தை 79% தள்ளுபடியில் வெறும் ரூ.2,500 கோடிக்கு வாங்கியது.
இதே போல, அதானி புராபர்ட்டீஸ், அதானி குட்ஹோம்ஸ், அதானி போர்ட்ஸ் & எஸ்.இ.இசட் ஆகிய நிறுவனங்கள், திவாலான பல தொழில் நிறுவனங்களை 42% முதல் 96% வரையிலான தள்ளுபடியில் வாங்கித் தள்ளியிருக்கிறது.
என்.சி.எல்.டி-யின் நடவடிக்கைகள் பல கேள்விகளை எழுப்பவே செய்கின்றன. திவாலான நிறுவனங்களை வாங்க பல்வேறு நிறுவனங்கள் விண்ணப்பித்தாலும், அதானி குழுமத்துக்கு மட்டுமே அடுத்தடுத்து கிடைப்பது ஏன், இந்த நிறுவனங்களை வாங்குகிற அளவுக்குப் பிற நிறுவனங்களிடம் முதலீடு இல்லையா, மற்ற நிறுவனங் களிடம் முதலீடு இல்லாதபோது, அதானி குழுமத்திடம் மட்டும் இவ்வளவு பணம் எப்படி இருக்கிறது, திவாலான நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு விற்கப்படும் நடவடிக்கை நியாயமாகத்தான் நடக்கிறதா என்கிற மாதிரியான பல கேள்விகளை ‘நேர்மையான கார்ப்பரேட் கவர்னன்ஸ்’ குறித்து அக்கறை செலுத்தும் அனைவரும் கேட்கின்றனர்.
இந்த விஷயத்தில் எல்லா நடவடிக்கைகளும் சரியாகத்தான் இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது. மத்திய அரசு சரியாகச் செயல்படுவது... நாட்டின் சட்ட அமைப்புகள் மற்றும் மக்களின் கைகளில் இருக்கிறது!