டெல்லி அருகில் உள்ள நொய்டாவில் கடந்த ஜனவரி மாதம் ஏர் இந்தியா ஊழியர் சூரஜ் மான் ஜிம்மில் இருந்து வெளியில் வந்த போது சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். போலீஸார் நடத்திய விசாரணையில் சூரஜ் மான் மீது எந்த வித கிரிமினல் வழக்கும் நிலுவையில் இல்லை என்று தெரியவந்தது. அதோடு சூரஜ் மான் சகோதரர் பர்வேஷ் மான் சிறையில் இருப்பதும், அவரது குடும்பத்திற்கு சூரஜ் மான் அடிக்கடி பண உதவி செய்து வருவதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இக்கொலையில் சிறையில் இருக்கும் மாபியா கபில் மான் ஈடுபட்டிருப்பது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.
கபில் மான் சிறைக்கு வெளியில் இருக்கும் தனது காதலி காஜல் கத்ரியின் உதவியோடு இப்படுகொலையை செய்திருப்பது தெரிய வந்திருப்பதாக போலீஸ் அதிகாரி சஞ்சய் பாட்டியா தெரிவித்தார். சஞ்சய் பாட்டியா இது தொடர்பாக அளித்த பேட்டியில், ''கபில் மான் தந்தையை பர்வேஷ் மான் ஆட்கள் கொலை செய்தனர். அதற்கு பழிவாங்க பர்வேஷ் மானுக்கு பண உதவி செய்து வந்த அவரது சகோதரர் சூரஜ் மானை சிறையில் இருக்கும் கபில் மான் தனது காதலி காஜல் மூலம் ஆள் வைத்து கொலை செய்துள்ளார். காஜலை வேறு ஒரு கொலை வழக்கில் தேடி வந்தோம்.
அவரைப்பற்றி தகவல் கொடுத்தால் 25 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தோம். சூரஜ் மான் கொலையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் காஜலுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. காஜல் சிறையில் இருக்கும் தனது காதலன் கபில் மான் கூட்டத்தை வெளியில் இருந்து கொண்டு வழிநடத்தி வந்தார். தொடர்ந்து தலைமறைவாக இருந்த காஜல், இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். காஜல் தன்னை கபில் மான் மனைவி என்றே வெளியுலகில் சொல்லிக்கொண்டிருந்தார்'' என்றார்.