சேப்பாக்கத்தில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தமிழக வீரரான அஷ்வின் மிகச்சிறப்பாக ஆடியிருந்தார். முதல் இன்னிங்ஸில் சதமடித்திருந்தார். இரண்டாம் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்திய அணி சறுக்கிய சமயங்களிலெல்லாம் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை மீட்டெடுத்தார்.
அஷ்வினுக்குதான் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு மைதானத்திலேயே வைத்து தன்னுடைய யூடியூப் சேனலுக்காக அஷ்வின் ஒரு பேட்டியை கொடுத்திருக்கிறார். அதில் நிறைய சுவாரஷ்யமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
அஷ்வின் பேசியிருப்பதாவது, 'சேப்பாக்கத்தில் இந்த டெஸ்ட்டில் களமிறங்கும் போது இதுதான் இந்த மைதானத்தில் நாம் ஆடும் கடைசி டெஸ்ட்டாக இருக்குமோ என்றெல்லாம் தோன்றியது. என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். சிறப்பாக ஆடிவிடுவோம் என்ற மனநிலையில்தான் இறங்கினேன். முதல் இன்னிங்ஸில் பேட்டிங் ஆடும்போதும் பெரிதாக எதையும் யோசிக்கவில்லை. பின்னங்காலை அழுத்தி ஒரு ஷாட்டை ஆடிய சமயத்திலேயே எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. அதன்பிறகு எந்த தடையும் இல்லை. சிறப்பாக ஆடிவிட்டேன். ஒரு காலக்கட்டத்தில் என்னுடைய பேட்டிங் பௌலிங் இரண்டையுமே ஒன்றாக போட்டு குழப்பிக் கொண்டு திணறிக்கொண்டிருந்தேன்.
இப்போது இரண்டும் வேறு வேறு. இரண்டுக்கும் வேறு வேறு யுக்திகள் வேண்டும் என்பது புரிந்துவிட்டது. அதனால்தான் என்னுடைய பேட்டிங்கும் மெருகேறியிருப்பதாக நினைக்கிறேன். டிராவிட் எல்லாமே முறைப்படி சரியாக இருக்க வேண்டும் என நினைக்கிற பயிற்சியாளர். கவுதம் கம்பீர் ரொம்பவே ரிலாக்ஸான கோச்சாக இருக்கிறார். அவர் சீக்கிரமே அத்தனை வீரர்களின் மனங்களையும் கொள்ளை கொண்டு விடுவார். துலிப் டிராபியை பார்த்துக் கொண்டிருந்த போது இதில் ஆடும் ஆப் ஸ்பின்னர்களெல்லாம் உன்னை திட்டிக்கொண்டிருப்பார்கள்தானே என என் மனைவி கமெண்ட் அடித்தார்.
அப்போதுதான் எனக்கு வயதாகிவிட்டது என்பதும் நீண்ட காலம் கிரிக்கெட் ஆடிவிட்டேன் என்கிற யதார்த்தத்தையும் உணர்ந்தேன். ஆனாலும் இன்னும் சில ஆண்டுகள் ஆட விருப்பப்படுகிறேன். எனக்கு எப்போதுமே பட்டங்களின் மீதும் மகுடம் சூட்டிக் கொள்வதின் மீதும் விருப்பம் இருந்தது இல்லை. அதை ஒரு வியாபார யுக்தியாகத்தான் பார்க்கிறேன். உங்களை நீங்கள் வியாபாரம் செய்துகொள்ளலாம். ஆனால், அது மற்றவர்களை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும்.' என்றார்.
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கான்பூரில் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.