புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, ``கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா ஏன் சர்ச்சையாக வேண்டும்? எனக்கு ஒன்றும் புரியவில்லை. பா.ஜ.க-வை பொறுத்தவரை நாங்கள் மற்ற அரசியல் கட்சிகளை விட மாற்று சிந்தனையை கொண்டு கட்சியை வளர்த்து வருகிறோம். சமுதாயத்தில் தீண்டாமை இருப்பது எவ்வளவு தவறு. அதே போன்று அரசியலிலும் தீண்டாமை இருப்பது மற்றும் கட்சிகளை பார்க்கக் கூடாது பேசக் கூடாது... அவர்களுடைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்பது எங்களுடைய நிலைப்பாடு கிடையாது. தேர்தலுக்காக அமைக்கின்ற கூட்டணி வேறு. பா.ஜ.க-வின் பல நிகழ்ச்சிகளுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் வந்துள்ளார். நாணயம் வெளியீட்டு விழாவை ஏன் சர்ச்சையாக விவாதிக்க வேண்டும்? பா.ஜ.க-வோடு தி.மு.க ரகசிய கூட்டணி வைத்துள்ளது என்ற எடப்பாடி பேச்சுக்கு தி.மு.க விளக்கம் அளிக்க வேண்டும். யார் யாரை கூப்பிடவில்லை என்பதற்கு தி.மு.க விளக்கம் அளிக்க வேண்டும். இதற்கு பா.ஜ.க பதில் சொல்ல முடியாது. பா.ஜ.க-வை பொறுத்தவரை தி.மு.க-வோடும், அ.தி.மு.க-வோடும் கூட்டணி வைத்திருந்தோம். தனது அரசியல் கட்சி கொடியை நடிகர் விஜய் அறிமுகப்படுத்துவதற்கு வாழ்த்துகள்.
விஜய்யோடு பா.ஜ.க கூட்டணி வைக்குமா என்பது குறித்து நான் பதில் கூற முடியாது. கூட்டணி சம்பந்தமாக எப்பொழுதும் நான் கருத்து தெரிவித்தது கிடையாது. பா.ஜ.க-வில் அதற்கென்று ஒரு அமைப்பு உள்ளது. அதுதான் கூட்டணி குறித்து முடிவு செய்யும். விஜய் அரசியலுக்கு வந்தால் யார் வாக்குகளை பிரிப்பார். அதுதான் எதிர்காலத்தில் கேள்வியாக இருக்கும். புதிதாக ஒருவர் அரசியல் கட்சி தொடங்குவதால் பா.ஜ.க கூட்டணிக்கு (எள்ளளவும்) எந்தவிதமான பாதிப்பும் இருக்காது. நடிகர் விஜய் தி.மு.க பாஷையில்தான் நீட் விவகாரமாக இருந்தாலும் சரி, எந்த விவகாரமாக இருந்தாலும் சரி பேசி வருகிறார். எனவே, அவர் அரசியலுக்கு வந்தால் தி.மு.க வாக்குகளைத்தான் பிரிப்பார். சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தனது தொகுதி தொடர்பாக தமிழக முதல்வரை சந்தித்துள்ளார். வேறு எதுவும் கிடையாது. தலித்துகள் முதல்வராக ஆக முடியாது என்று திருமாவளவன் கூறிய கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. பா.ஜ.க ஆளும் பல்வேறு மாநிலங்களில் தலித் முதலமைச்சர்களை கொண்டு வந்துள்ளோம். ஜனாதிபதிகூட அந்த சமுதாயத்தை சேர்ந்தவர் தான். பட்டியலினத்து மக்களை கௌரவப்படுத்துபவர்கள் பா.ஜ.க-வினர்தான். தமிழகத்தில் தலித் ஏன் முதலமைச்சராக ஆக முடியவில்லை என்று திருமாவளவன் தி.மு.க தலைவரைத்தான் கேட்க வேண்டும். அவருக்கு முதல்வராக ஆக விருப்பம் இருந்தால், அதை வெளிப்படையாக 'தி.மு.க-தான் முதல்வராக ஆவதை தடுக்கிறது' என்று அறிவிக்க வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பு ஏற்கனவே கர்நாடகாவில் எடுக்கப்பட்டது. அதை ஏன் அவர்கள் வெளியிடவில்லை?. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் 140 கோடி மக்களையும் நீங்கள் எந்த சாதி என்றுதான் கேட்டு, அதன்படி தான் கணக்கெடுப்பு நடத்த முடியும். ஒவ்வொரு மக்களையும் அதே போன்று கேட்கும் போது வராத கோபம், ராகுல் காந்தியை கேட்கும் போது மட்டும் கனிமொழிக்கு ஏன் கோபம் வருகிறது? 140 கோடி மக்களையும் நீங்கள் எந்த சாதி என்று கேட்டு கணக்கெடுப்பு நடத்தும்போது சரி என்றால், ராகுல் காந்தியைப் பார்த்து கேட்கும்போது மட்டும் எப்படி நாகரிகமற்ற செயலாக அது மாறும்? அண்ணாமலை அரசியல் படிப்பிற்காக லண்டன் செல்கிறார். அதை இன்னும் அவர் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. முதல்வரின் அமெரிக்கா பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் முதலீடு ஈர்ப்பதற்காக செல்கிறாரா அல்லது முதலீடு செய்ய செய்கிறாரா என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.
ஏனென்றால், ஏற்கெனவே துபாய் முதலீடு பயணத்தில் என்னென்ன முதலீடு வந்தது என்பது இதுவரை தெரியவில்லை. முதல்வருக்கும் வாழ்த்துகள். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக ஆவதால் தமிழக அரசியலிலோ, நிர்வாகத்திலோ என்ன மாற்றம் ஏற்படபி போகிறது... ஒரு மாற்றமும் ஏற்படாது. திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் ஏதோ குழப்பம் நடந்து கொண்டுள்ளது. பொறுத்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று. ஆளுநர் அளிக்கும் விருந்தில் அ.தி.மு.க, பா.ஜ.க ஆகிய கட்சிகள் கலந்து கொண்டன. ஆனால், தி.மு.க கூட்டணியில் தி.மு.க-வை தவிர எந்த கட்சியும் கலந்து கொள்ளவில்லை. அண்ணாமலை பேச்சு முதிர்ச்சியற்ற பேச்சு என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளது பற்றி கேட்கிறீர்கள். அப்படியென்றால், உதயகுமார் பேச்சு மட்டும் மகிழ்ச்சி தரும் பேச்சா... பா.ஜ.க தலைவர் குறித்து மற்றவர்கள் பேச தேவையில்லை" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88