BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday, 19 August 2024

Thangalaan: "இந்தப் படம் ரிலீஸாகாதுனு என் காதுபடவே பேசுனாங்க. ஆனால் இப்ப..." - இயக்குநர் பா.இரஞ்சித்

விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் 'தங்கலான்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

கோலார் தங்க வயலின் வரலாற்றுடன் சில மாய எதார்த்த எலமென்டுகளுடன் திரைப்படத்தைக் கோர்த்திருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித். இத்திரைப்படத்தின் 'நன்றி தெரிவிக்கும் விழா' இன்று நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவருக்கும் ஒரு புத்தர் சிலையை அன்பளிப்பாக வழங்கினார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.

இந்த நிகழ்வில் பேசிய எழுத்தாளர் அழகிய பெரியவன், "ரஞ்சித் வெறுப்பாற்றில் நீந்தி வெற்றி பெற்றிருக்கிறார். இது ஒரு பெஞ்ச் மார்க் திரைப்படம். தங்கலான் வரலாற்றிலேயே முக்கியமான திரைப்படம். அமெரிக்காவிலிருந்தும் அம்மா பேட்டையிலிருந்தும் தங்கலான் படத்தைப் பற்றிதான் பேசுகிறார்கள். இந்த திரைப்படத்தில் நான் வேலை பார்த்ததுக்குக் காரணம் ரஞ்சித்தான்." என்றார்.

Arjun

தங்கலான் திரைப்படத்தில் விக்ரமுக்கு மூத்த மகனாக அசோகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அர்ஜுன், தங்கலான் படக்குழுவுக்கும் தனது நண்பர்களுக்கும் நன்றியைக் கூறி உரையை தொடங்கினார். அவர், "எங்க அம்மாக்கு விசில் எதுவும் அடிக்க தெரியாது. ஆனால் தனியாக ஒரு விசில் வாங்கிட்டு வந்து நான் தங்கலான் படத்துல தோன்றின காட்சியெல்லாம் விசில் அடிச்சது எனக்கு ரொம்ப நெகிழ்வாக இருந்துச்சு." என்றார்.

முக்கியமாக இப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக இயக்குநர் பா. இரஞ்சித்தின் மனைவி அனிதாவும் பணியாற்றியிருக்கிறார். அவர் பேசும்போது, "எல்லோரும் சொல்ற மாதிரி முதல்ல இந்த படத்துல எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் ரஞ்சித்துக்கு நன்றி. இதுக்கு சாதரண நன்றி மட்டும் சொல்ல முடியாது. இந்த பிரமாண்ட படைப்புல நாம் பணியாற்றியது ஆர்ப்பரிக்கிற ஆனந்தத்தைக் கொடுக்குது." எனப் பேசினார்.

Sakthivelan

இதன் பிறகு பேசிய விநியோகஸ்தர் சக்திவேலன், "இந்தப் படம் உலகம் முழுவதும் நான்கு நாள்களில் 68 கோடி வசூல் பண்ணியிருக்கு. நடிப்புல என்னென்ன விருதுகள் இருக்கோ அதெல்லாம் விக்ரம் சாருக்கும், இயக்குநருக்கு என்னென்ன விருதுகள் இருக்கோ அதெல்லாம் ரஞ்சித் சாருக்கும் கொடுக்கணும். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சார், 'எனக்கு பருத்திவீரன் மாதிரி தங்கலான் ஒரு எபிக் ஃபிலிம்'னு சொன்னாரு." என்றார்.

மேலும் இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் பா.இரஞ்சித், "தங்கலான் ஒரு முக்கியமான வெற்றியை தமிழ் சமூகத்துல ஏற்படுத்தியிருக்கு. புதிய அனுபவத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும், எனக்கு இருக்கும் அகத்தை மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற வேட்கைதான் இந்த திரைப்படம். இந்த படத்துக்கு நேர்மறையான நிறைய விஷயங்கள் பலர் எழுதுறதைப் பார்க்கும்போது ரொம்பவே சந்தோஷமாக இருக்கு. ஒவ்வொரு படத்துக்கு உழைப்பு ரொம்பவே முக்கியம். நான் இன்னைக்கு இங்க நிக்கிறதுக்கு முக்கிய காரணம் உழைப்புதான். என்னையும் தாண்டி இந்தப் படத்துக்கு நிறைய பேர் பயங்கரமாக உழைச்சிருக்காங்க. அது காசுக்காக மட்டும் இல்ல.

Vikram and Ranjith

என் மேல வச்சிருக்கிற அன்பும் இதுக்கொரு முக்கிய காரணம். சில நேரங்களில் நம்ம மேல வன்மம் வரத்தான் செய்யும். அதுல கவனம் செலுத்துனா அங்கயே நின்னுடுவோம். அதுக்குமேல நீங்க அன்பு கொடுக்கும்போது அதை பத்தி நான் ஏன் கவலைப்படணும். தங்கலான் படத்தை பத்தி பல்வேறு இடங்களில் பேசுறாங்க. இப்படியான எதிர்பார்ப்பு இருக்கிறதுக்கு காரணம் என்னுடைய வேலை பிடிச்சதுனாலதான். இந்த படத்தோட வெற்றி மிகப்பெரிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கு. அழகிய பெரியவன் அண்ணனோட வசனங்கள்தான் படத்தை இன்னும் உயிர்ப்பாக மாத்தியிருக்கு. அனிதாவோட ஓவியங்கள், அவங்க வண்ணங்களைப் பயன்படுத்துற விதம் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும். அதன் பிறகு அவங்களை ஆடை வடிவமைப்பாளராக கூப்பிடலாம்னு யோசிச்சேன்.

ஆனா, நமக்கு நெருக்கமானவங்க நம்ம பக்கத்துலேயே இருக்கும்போது ஒரு மாதிரியான கவனத்தோட இருக்கணும். அனிதா ஷூட்டிங் வந்ததும் 'தயவு செஞ்சு ஷூட்டிங்ல மானிட்டர் பக்கத்துல வராத'னு சொல்லிட்டேன். கிராபிக்ஸ்ல சில குறைகள் இருந்தது. ஆனால் படத்தை முடிச்சு கொடுக்கணும்னு இரவு பகலாக கிராபிக்ஸ் டீம் வேலை பார்த்திருக்காங்க. தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சார் எனக்கு உறுதுணையாக இருந்தார். தங்கலான் படத்துல ஓவர் பட்ஜெட் பிரச்னை வந்தது. என் காதுபட நிறைய பேர் படம் ரிலீஸாகதுனு பேசுனாங்க. ஆனா அதையெல்லாம் தாண்டி ரிலீஸ் பண்ணியிருக்காரு.

Pa. Ranjith

இன்னைக்கு எனக்கு கால் பண்ணி 'நான் பெரிய ஹீரோவை கூடிட்டு வர்றேன். கமர்சியல் படம் பண்ணலாம்'னு சொன்னாரு. முக்கியமாக, விக்ரம் சார் ஏன் இப்படி உழைக்கணும், ஒவ்வொரு விஷயத்துக்கும் சிரத்தயோட வேலை பார்த்துட்டே இருக்காருனு யோசிச்சேன். அவர் ரசிகர்கள் மேலையும் கலை மேலையும் அதிகமான காதல் வச்சிருக்காரு. அதுதான் இந்த உழைப்புகெல்லாம் காரணம். நான் என்னுடைய வாழ்க்கைல இப்படியான ஒரு ஆர்டிஸ்ட்டை வேலை வாங்கினதை நினைச்சு சந்தோஷப்படுறேன்." என்றார்.

இறுதியாக வந்து பேசிய சீயான் விக்ரம், "இந்தப் படத்துக்காக எங்க தங்கலான் குடும்பம் தேள், பாம்பு விளையாடுற களத்துல கபடி விளையாடினோம். இந்த படத்துக்காக ரஞ்சித் என்கிட்ட முதல்ல வந்து பேசும்போது என் முடியைப் பாதி வெட்ட சொன்னாரு. அதற்குப் பிறகு கோவணம் கட்ட சொன்னாரு. 'மெயின் ஸ்ட்ரீம் நடிகர்கள் இதை பண்ணமாட்டாங்க, நீங்க பண்றீங்களா'னு கேட்டார். நான் ஒத்துக்கிட்டேன். அவர் என்னை ஆதாமாக நடிக்க சொன்னாக்கூட நடிப்பேன். ரஞ்சித் என்னுடைய கையைப் பிடிச்சு கூட்டிட்டு போனாரு. அவர் இல்லைனா இந்த கதாபாத்திரத்தை நான் பண்ணியிருக்க முடியாது.

Vikram

எனக்கும் என்னுடைய இயக்குநர்களுக்கும் எப்போதும் ஒரு நட்பு இருக்கும். பாலா, ரஞ்சித், தரணினு எல்லோரிடமும் சினிமாவைத் தாண்டி நட்பு இருக்கும். ஆனால், வேலை நேரத்தில் வேலை பார்த்திடுவோம். அழகிய பெரியவன் எழுதின 'சாக துணிஞ்சவனுக்குதான் இங்க வாழ்க்கை'ங்கிற வசனம் ஒரு எமோஷன். இதுக்கு முன்னாடி கோப்ரா படம் சரியாகப் போகல. ஆனால், அந்தப் படத்துல நடிச்ச மாதிரி நான் எந்த படத்துலையும் நடிச்சது இல்ல. இன்னைக்கு டிமான்டி காலனி 2 நல்லா போயிட்டு இருக்குனு பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கு. அதே மாதிரி மகான் திரைப்படம் ஓடிடில வந்துச்சு. இன்னைக்கும் அந்த படத்தைப் பத்தி பல இடங்களில் கேட்கிறாங்க. அந்தப் படம் எனக்கு ஸ்பெஷல் என் பையனோட சேர்ந்து நடிச்சதுனால.." எனப் பேசி முடித்தார்.



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies