BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 24 August 2024

`வயசுக்கு வந்த பிள்ளைக கிழிசலைக் கட்டிட்டுத் திரிஞ்சா நல்லா இருக்குமா?' - அவளின் சிறகு

பெரிய அளவில் ஜவுளிக்கடை இல்லாத காலகட்டம் அது. பக்கத்து ஊரில் கடை நடத்தும் வியாபாரி ஒருவர் டி.வி.எஸ் 50 ஒன்றில் துணிகள் அடைத்த பெரிய மூட்டைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வியாபாரத்திற்கு எடுத்து வருவார். பெண்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை அட்வான்ஸாக கொடுத்துவிட்டு அவரிடம் துணி எடுத்துக்கொள்ளலாம். அடுத்தமுறை துணி வியாபாரத்திற்கு அவர் வரும்போது பாக்கி கட்டணத்தைக் கட்டிவிட வேண்டும். இப்போது புடவை வேண்டாம் என இருக்கும் பெண்கள், கடன் தொகையைக் கட்ட வரும்போது சும்மா பார்த்து, ஒரு புடவையை வாங்குவார்கள் என்பது அவரின் தொழில் சூட்சமம். இதனால் எங்கள் கிராமத்தில் அவருக்கு தொடர்ந்து வாடிக்கையாளர்கள் இருந்துகொண்டே இருந்தார்கள். எங்கள் பக்கத்து தெருவைச் சேர்ந்தவர் ரம்யா அக்கா. அவர் வீட்டில் வைத்து துணி வாங்கமாட்டார். எங்கள் வீட்டுக்கு துணி வியாபாரி வரும்போது, தேவையான புடவைகளை வாங்கி என் அம்மாவிடம் கொடுத்துவிடுவார்.

அம்மா, மகள்

ரம்யா அக்கா இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அவரின் அம்மா வீட்டிற்குச் செல்வது வாடிக்கை. அவர் ஊருக்குக் கிளம்பும் தினத்தில் அவர் வாங்கி வைத்த புடவையை பஸ் ஸ்டாண்டிற்கு எடுத்துவரச் சொல்லிவிடுவார். என் அம்மா என்னிடம் கொடுத்துவிட, மஞ்சள் பையில் வைத்து யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்று அவர் பஸ் ஏறியதும் நான் கொடுத்துவிட்டு வருவேன். 'என்ன காரணம்?', 'ஏன் யாருக்கும் தெரியாமல் சேலையை எடுத்துவரச் சொல்லுகிறார்?' என்பதெல்லாம் புரியாத வயது அது. கடந்த பத்து ஆண்டுகளாக அது தொடர்கதையாக, "ஏக்கா ஏன் நீ புதுத்துணியை உன் வீட்டுக்கு எடுத்துட்டுப் போக மாட்டுற, எங்க வீட்டுல எதுக்கு வெச்சுட்டு திருட்டுத்தனமா ஊருக்குப் போறப்போ எடுத்துட்டுப் போற... மாமா திட்டும்னு பயமா?" என்று கேட்டேன்.

"அட நீ வேற ஏன் டீ...அந்த ஆளு திட்டுனா வாங்கிக்கலாம். ஆனா, எங்க அப்பன், ஆத்தாளை அசிங்கப்படுத்துவாரு. இங்க எடுக்குற துணி எனக்கு இல்ல. எங்க அம்மா, அக்கா, தங்கச்சிகளுக்கு. நான் என் வீட்டுக்கு செலவு பண்றது அவருக்குப் பிடிக்காது. அவங்க வீட்டுக்குச் செய்யணும்னா நான் என் நகையைக்கூட அடைமானம் வெச்சுக் குடுக்கத் தயாரா இருக்கணும். இல்லனா நான் நல்ல பொம்பள இல்லைங்கிற அளவுக்குப் பேசுவாரு. அதே நான் என் வீட்டுக்கு ஏதாவது செய்யணும்னா, 'எதுக்கு எடுத்துக் குடுக்குற', 'வக்கு இல்லாத வீட்டுல பொண்ணு எடுத்தா இப்படித்தான் என் சம்பளத்தை அழிக்கணும்'னு பொலம்புவாரு. அதுதான் என் குடும்பத்துக்கு எது செஞ்சாலும் அவருக்குத் தெரியாம செய்ய வேண்டியிருக்கு. நான் ஒன்னும் அவரு காசுல வாங்கல. தினமும் 300 ரூபாய்க்கு தீப்பெட்டி ஒட்டுறேன். 200 ரூபாயை வீட்டுச்செலவுக்கு அந்த மனுஷனே வாங்கிப்பாரு. மீதி இருக்குற காசுல என் பிள்ளைகளுக்கு தின்பண்டம் வாங்குறது, நோட்டு புத்தகம் வாங்குறதுனு சின்னச் சின்ன செலவுகள் வரும். அதெல்லாம் போக மிச்சப்படுத்துற காசுல எங்க வீட்டுக்கு ஏதாவது பண்ணணும்னு நினைக்கிறேன். இது எப்படி தப்பாகும்... திருட்டுத்தனமாகும்?

அவளின் சிறகு

எங்க அப்பாவுக்கு கை, கால் வராம போயி 15 வருசம் ஆச்சு. எங்க ஆத்தா இட்லி வியாபாரம் பண்ணி வீட்டை பாத்துக்குது. ரெண்டு தங்கச்சிங்க, ஒரு தம்பி இருக்காங்க. நான் பன்னெண்டாவது வரை படிச்சேன். உடனே கல்யாணம் பண்ணிக்கொடுத்துட்டாங்க. அடுத்த வருசமே அப்பாவுக்கு முடியாமப்போக, வேற வழியில்லாம தங்கச்சிங்க ஸ்பின்னிங் மில்லுக்கு வேலைக்குப்போக ஆரம்பிச்சுருச்சுங்க. தம்பியாவது பள்ளிக்கூட படிப்பை முழுசா முடிக்கட்டும்னு நினைக்கிறோம். வீட்டுல இருக்குற கஷ்டத்துக்கு நல்ல துணியெல்லாம் எங்க அம்மாவால நினைச்சுக்கூட பார்க்க முடியாது. அம்மா கட்டுற சீலைகளைத்தான் தங்கச்சிங்களும் மாத்தி மாத்தி கட்டுதுங்க. கையில, காதுல குண்டு மணி தங்கம் கூட கிடையாது. உடுப்பாவது நல்லபடியா இருக்க வேண்டாமா? வயசுக்கு வந்த பிள்ளைக கிழிசலை கட்டிட்டுத் திரிஞ்சா நல்லா இருக்குமா?" என்று ரம்யா அக்கா பேசிக்கொண்டே கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள். ஆற்றாமைக்கு வார்த்தகள் இல்லாமல் அமைதியாக இருந்தேன்..." மூக்கை சிந்திக்கொண்டே மீண்டும் தொடர்ந்தாள். " அதனால வருசத்துக்கு ரெண்டு முறை நான் டிரெஸ் வாங்கித்தர்றேன். அதையே எங்க ஆத்தா யோசிச்சுதான் வாங்கும்.

ஓரு ஆம்பளப்புள்ள இருந்தா என் வீட்டோட நிலைமை இப்படி இருக்குமா... என் குடும்பம் நல்லா இருந்தப்போ கட்டிலு வாங்கிட்டு வா, மெத்தை வாங்கிட்டு வா... அதெல்லாம் தர்றது தான் அன்புனு சொன்ன குடும்பம், இன்னைக்கு என் அம்மா எனக்காக ஆசையாகக் கொடுத்து விடுற புளிக்கொழம்பையும், பொடி வகைகளையும் நக்கலா தான் பார்க்குறாங்க. இதைக் கொண்டு வந்து தான் வீடு நிறையப் போகுதானு அவமானப்படுத்துறாங்க. 'அன்போட அளவை பணத்தை வெச்சு தான் எடை போடுறாங்க" என்று ரம்யா அக்கா சொல்லும் போது கஷ்டமாகத்தான் இருந்தது. ஓர் ஆண் தன் குடும்பத்திற்கு செலவு செய்வது, தன் பெற்றோரை பார்த்துக் கொள்வது, மருத்துவச் செலவுகளுக்கு உதவுவது கடமையாக பார்க்கப்படும் போது, பெண்களுக்கு மட்டும் ஏன் தயக்கங்களாக, கட்டுப்பாடுகளாக மாறியது...

அவளின் சிறகு

ஒரு பெண் திருமணத்திற்கு பின் தன் குடும்பத்தை கவனிப்பது, பெற்றோர்களுக்கு விருப்பப்பட்டதை, தேவைப்படுவதைச் செய்வது, அவர்களுடன் நேரம் செலவிடுவது, இதெல்லாம் இப்போது வரை ஆண்களிடம் அனுமதி கேட்டுப்பெற வேண்டிய விஷயங்களாக இருப்பது எதனால்? தன் அம்மா, அப்பா செலவிற்கு பணம் கொடுத்து உதவும் எத்தனை ஆண்கள், தன் மனைவியின் குடும்பத்திற்கு செலவு செய்யத் தயாராக இருக்கிறார்கள்... எத்தனை ஆண்கள் நீ உன் வீட்டிற்கு பணம் கொடுப்பது உன் கடமை என்று பேசியிருக்கிறார்கள். அப்படி கேட்பவர்கள் இப்போதும் மிக அரிது தானே.

எங்கள் பக்கத்து வீட்டு தீபா தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவரின் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டுமானால் சில வாரங்களுக்கு முன்பு இருந்தே தன் கணவரிடம் சொல்லிக்கொண்டே இருப்பாள். டிக்கெட் பணத்தை அவளின் கணவரிடமிருந்து வாங்குவதற்குள் அவள் படும்பாடு சொல்லித் தீராது. தீபாவிற்கு சுயவருமானம் இல்லை. அதனால் அவளின் நிலை இப்படி. ஆனால், நல்ல வருமானம் ஈட்டும் என் பள்ளித்தோழி கீதாவின் நிலைக்கும் தீபாவின் நிலைக்கும் பெரிதும் வேறுபாடு இருந்ததில்லை.

கீதாவின் கணவர் நன்றாக வருமானம் ஈட்டும் நபர். அவளும் மாதம் 30,000 ரூபாய் சம்பளம் ஈட்டும் பணியில் இருந்தாள். கீதாவின் அப்பாவிற்கு உடல் நலம் சரியில்லாமல் போனபோது, அவர்கள் நினைத்திருந்தால் நல்ல மருத்துவமனையில் அவளின் அப்பாவைச் சேர்த்து வைத்தியம் செய்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை. 'கையில காசு இருந்தும் அப்பாவுக்கு நல்ல வைத்தியம் செய்ய முடியல. எனக்கு காய்ச்சல் வந்தாகூட அப்பா துடிச்சுப்போயிருவாரு. ஆனா, அரசு ஆஸ்பத்திரில படுக்க சரியான வசதி இல்லாம, கழிப்பறை சுத்தம் இல்லாம, பத்துல ஒருத்தரா அப்பாவை பார்த்த நிமிஷம்" என்று சொல்லும்போதே உடைந்து அழுதாள்  கீதா.

அவளின் சிறகு

அந்தக் காலத்தில் ஆண்கள் வருமானம் ஈட்டினார்கள். அதனால் ஒரு பெண் அவளின் குடும்பத்திற்குச் செலவு செய்வது என்பது அந்த ஆணின் உழைப்பின் மூலம் என்பதால் கட்டுப்பாடுகள் இருந்திருக்கலாம். ஆனால், பெண்கள் சம்பாதிக்கத் தொடங்கிய பின்பும், இன்னும் சூழல் மாறாமல் இருப்பது ஏன்? தன் மாமியார் , மாமானாருக்கு பணத்தைச் செலவு செய்ய விடாமல் கணவர்களைத் தடுக்கும் பெண்களும் இருக்கிறார்கள். ஆனால், அது அவர்களின் குணக்குறைபாடாக இருக்கலாம். ஆனால், ஆண்கள் தங்கள் மாமானார், மாமியாருக்கு செலவு செய்யத் தயங்குவதே சிக்கலாக இருக்கிறது. ரம்யா, கீதா... இன்னும் பல பெண்கள் தன் குடும்பத்திறாக எதையோ செய்ய வேண்டும் என்ற ஆசையுடனோ, ஏக்கத்துடனோ, செய்ய முடியவில்லை என்ற வருத்தத்துடனோ இருக்கலாம். நமக்காக நிற்பவர்களுக்கு நாமும் துணையாக நிற்க வேண்டும் என்பதே அன்பின் அடிப்படை. குடும்பம் என்பதையும், அன்பு என்பதையும் ஆண்களுக்கு தனி வடிவத்திலும் பெண்களுக்கு தனி வடிவத்திலும் வைக்காமல் பொதுவாக வைப்போம். பெற்றோரைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு என்பது இருவருக்குமானது. கைகோத்து சுமந்து கொள்வோம். அன்பு விரிந்து, பெண்களின் உலகம் இன்னும் அழகாகட்டும்!



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies