தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்து சமய அறநிலையத்துறையின் முன்னெடுப்பில் பழனியில் அகில உலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த மாநாட்டில், 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சித்த மருத்துவத்தை இனிவரும் காலங்களில் தமிழர் சித்த மருத்துவம் என்று அழைத்திட தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்தும், பழனியில் தமிழர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைத்திட பரிந்துரைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் வரவேற்கத்தக்கவை.
கோயில்களில் திருப்பணி மேற்கொள்வது தொடர்பான சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது துறை சார்ந்த நடவடிக்கை என்ற அளவில் பொருத்தமானதே. ஆனால், முருகன் திருக்கோயில்களில் மாணவ - மாணவிகளைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது, இந்தத்துறையின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மீகப் பாடப்பிரிவுகளை ஏற்படுத்துவது, துறையின் கீழ் நடத்தப்படும் கல்வி நிலையங்களில் முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி போட்டிகள் நடத்துவது என்பன போன்ற தீர்மானங்கள் ஏற்கத்தக்கவை அல்ல.
கல்வி நிலையங்கள் சிலவற்றை இந்துசமய அறநிலையத்துறை நடத்தினாலும் மாநில அரசு வகுத்துள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே இக்கல்வி நிலையங்கள் நடைபெறவேண்டும். மத போதனைக்காக இந்தக் கல்வி நிலையங்கள் உருவாக்கப் படவில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும். மாறாக பள்ளி மாணவர்களைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் போன்றவற்றை கல்வி நிலையங்களே நடத்துவது என்பது மதச்சார்பின்மைக் கோட்பாட்டிற்கு எதிரானதாகும்.
மத நம்பிக்கை என்பது தனிமனிதர்களின் விருப்பத் தேர்வாக இருக்கவேண்டுமேயன்றி எந்தவொரு மதக்கோட்பாட்டையும் புகுத்துவது மதச்சார்பற்ற அரசுகளுக்கு பொருத்தமானது அல்ல.
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு கல்வித்துறையை காவிமயமாக்கவும் கார்ப்பரேட் மயமாக்கவும் துடிக்கிறது. ஒன்றிய அரசின் கல்விக்கொள்கையை ஏற்காத மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்க மறுத்து பழி வாங்குகிறது. தமிழ்நாடு அரசு தமிழகத்திற்கென்று தனி கல்விக்கொள்கை என்று அறிவித்து அதற்கான நிபுணர் குழுவையும் அமைத்து அதன் பரிந்துரைகளைப் பெற்றுள்ளது. அதைப் பரிசீலித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்நிலையில், ஒன்றிய அரசு பாணியிலேயே மாநாட்டில் சில தீர்மானங்கள் அமைந்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. அனைத்துச் சாதியினரும் அனைத்துக் கோவில்களிலும் பாலின வேறுபாடின்றி அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவதை விரைவுபடுத்துவதும் தமிழில் குடமுழுக்கு உட்பட வழிபாட்டில் தாய்மொழியை முதன்மைப்படுத்துவதும், காலத்திற்கேற்ப மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளாகும்.
அதே நேரத்தில், முத்தமிழ் முருகன் மாநாட்டில் மதச்சார்பின்மைக் கோட்பாட்டிற்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று தீர்மானங்களையும் திரும்பப்பெற வேண்டுமென தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது..." என்று தெரிவித்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88