கோவை மாவட்டம், சிறுமுகை பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (54). ஆலங்கொம்பு அரசு உயர்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் சார்பில் அந்தப் பள்ளியில்,
பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம், குழந்தைகள் உதவி மையம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அப்போது மாணவிகளுக்கு ஏதாவது பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்துள்ளதா என அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
அதற்கு 7,8 மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் 9 மாணவிகளிடம் இடைநிலை ஆசிரியர் நடராஜன் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து முதலில் கீதா, ஷியாமளா ஆகிய ஆசிரியர்களிடம் சொல்லியுள்ளனர்.
மேலும் தலைமை ஆசிரியர் ஜமுனா, மூத்த பட்டதாரி ஆசிரியர் சண்முகவடிவு ஆகியோருக்கும் தகவல் தெரிந்துள்ளது. இருப்பினும் அவர்கள் பள்ளி அளவில் சம்பிரதாயத்துக்கு விசாரணை நடத்திவிட்டு, காவல்துறை மற்றும் குழந்தைகள் நல அலுவலகத்தில் தகவல் சொல்லவில்லை.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்சா, நடராஜன் மீது காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் நடராஜன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த சம்பவத்தை மறைக்க முயற்சித்த, தலைமை ஆசிரியர் உள்ளிட்ட மற்ற ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைக்காக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.