நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. ஜோ பைடன், கமலா ஹாரிஸை அடுத்த அதிபர் வேட்பாளாராக முன்னிறுத்தியதிலிருந்து, அவருக்கான ஆதரவும் அதிகரித்து வருகிறது. அதே நேரம், கமலா ஹாரிஸை எதிர்த்து களமிறங்கியிருக்கும் டொனால்ட் ட்ரம்பும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.
இந்த நிலையில், ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, ``புதிய அத்தியாயத்துக்கு அமெரிக்கா தயாராக இருக்கிறது. அதிபர் தேர்தல் வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸிடம் கட்சியின் ஜோதி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஜனநாயகக் கட்சியினருக்கான வேலை இன்னும் முடியவில்லை.
அமெரிக்க அதிபர் தேர்தல் மிகவும் கடுமையான போட்டியாக இருக்கும். கடந்த சில வாரங்களாக நம்மால் உருவாக்க முடியாத அளவிலான ஆற்றலை பேரணிகள், பிரசாரங்களுக்காக உருவாக்கியிருக்கிறோம். ஆதனால் தேர்தல் இறுக்கமாக நடக்கலாம். கமலா ஹாரிஸ் வங்கிகளையும், குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களையும் தொடர்ந்து கண்காணித்து பின்தொடர்ந்தார். வீட்டு அடமான நெருக்கடியில் சிக்கிய வீட்டு உரிமையாளர்களுக்கு, நியாயமான தீர்வு கிடைப்பதை உறுதிசெய்ய என்னையும் எனது நிர்வாகத்தையும் மிகவும் கடினமாக செயல்படத் தூண்டினார்.
அதனால், கமலா ஹாரிஸ் மக்களின் பிரச்னைகளில் கவனம் செலுத்துவார் என நம்புகிறோம். தன் சொந்த வாக்காளர்களை மட்டும் திருப்திபடுத்த முயலமாட்டார். தனக்கு கட்டுப்பட மறுப்பவர்களை தண்டிக்கமாட்டார். எனவே, அமெரிக்காவின் எதிர்காலத்துக்காக வாக்களிக்க கேட்டுக்கொள்கிறேன். அதிபர் தேர்தலில் போட்டியிடும் 78 வயதான கோடீஸ்வரர் ஒருவர், கமலா ஹாரிஸிடம் தோற்றுவிடுவோமோ என்று பயப்படுவதால், அவரின் பிரசார களம் உண்மையில் மோசமாகி வருகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை எனது நண்பர் என்று அழைப்பதில் பெருமையடைகிறேன். அரசியலில் மிக முக்கியமான காரியத்தைச் செய்வதில் தன்னலமற்றவர். நாட்டின் நலனுக்காக தனது சொந்த லட்சியத்தை ஒதுக்கி வைப்பவர். பெரும் ஆபத்து நேரத்தில், ஜனநாயகத்தை பாதுகாத்த ஒரு தலைசிறந்த ஜனாதிபதியாக ஜோ பைடனை வரலாறு நினைவு கூறும். அவரை எனது ஜனாதிபதி என்று அழைப்பதிலும், என் நண்பர் என அழைப்பதிலும் நான் பெருமைப்படுகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88