விவசாயம் செய்பவர்கள் விவசாயத்தோடு அதிலிருக்கும் தொழில் சார்ந்த முயற்சிகளை கையில் எடுக்கும்போது அடுத்தகட்டத்துக்கு இன்னும் எளிதாக நகர முடியும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயி சதீஷ்.
கோதுமை விவசாயியயான இவர், தற்போது அறுவடை இயந்திரங்களின் உரிமையாளராகி இருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலம், ஜல்னா மாவட்டத்தில் உள்ள லிம்பி என்ற கிராமத்தை சேர்ந்தவர்தான் சதீஷ். ஒரு காலத்தில் காய்கறி விற்பனை செய்து வந்த சதீஷ் இப்போது 32 அறுவடை இயந்திரங்களின் உரிமையாளராக இருக்கிறார். இதுகுறித்து சதீஷ் கூறுகையில்,''15 ஆண்டுகளுக்கு முன்பு நான் 10 ஏக்கரில் கோதுமை பயிரிட்டு இருந்தேன்.
கோதுமை பயிர் அறுவடைக்கு தயாரான பிறகு அதை அறுவடை செய்ய எங்கள் பகுதியில் இயந்திரம் கிடைக்கவில்லை. பிறகு பஞ்சாப்பிலிருந்து ஒரு இயந்திரம் வந்தது. நாங்கள் அந்த இயந்திரம் மூலம்தான் அறுவடை செய்தோம். தொடர்ந்து ஒவ்வொரு அறுவடையின் போதும் அந்த அறுவடை இயந்திரத்தை பயன்படுத்திதான் அறுவடை செய்து வந்தோம். இந்த அறுவடை இயந்திரத்தை பயன்படுத்த ஆரம்பத்தில் 1 மணி நேரத்துக்கு 900 ரூபாய் வாங்கிக்கொண்டிருந்தார் அதன் உரிமையாளர். ஆனால், போக போக 1800 ரூபாயாக உயர்த்திவிட்டார். அதனால் சொந்தமாக ஓர் அறுவடை இயந்திரம் வாங்குவது என்று முடிவு செய்தேன். நேரடியாக பஞ்சாப்பிற்கு சென்றேன். அங்கு அறுவடை இயந்திரங்கள் தயாரிக்கும் 32 கம்பெனிகளைப் பார்வையிட்டேன். விவசாயிகளுக்கு பயனுள்ள இயந்திரமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். வங்கியில் கடன் வாங்கி முதல் அறுவடை இயந்திரத்தை 2009-ம் ஆண்டு வாங்கினேன். முதல் ஆண்டில் 650 ஏக்கர் கோதுமை அறுவடை செய்தேன். அதே ஆண்டு மீண்டும் இன்னொரு இயந்திரத்தை வாங்கினேன்.
இன்றைக்கு என் வீட்டிற்கு பின்புறமும், முன்புறமும் பலவிதமான அறுவடை இயந்திரங்கள் அணிவகுக்கின்றன. உளுந்து, பாசிப்பயிறு, நெல், கோதுமை, சோயாபீன்ஸ், மக்காச்சோளம் உட்பட அனைத்து வகையான பயிர்களின் அறுவடை இயந்திரங்களும் என்னிடத்தில் உள்ளன. ஆரம்பத்தில் கோதுமை விவசாயத்தோடு காய்கறி விற்பனையும் செய்து கொண்டிருந்தேன். எனது கடின உழைப்பால் இன்று 35 ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறேன். அதோடு அறுவடை இயந்திரங்கள் 32 இருக்கின்றன. அறுவடை காலம் 8 மாதங்கள் இருக்கும். இந்த நேரத்தில் வாடகைக்கு இயந்திரங்களை அனுப்புவேன். இந்த 8 மாதத்தில் பஞ்சாப், ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த 70 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கிறேன். இந்த தொழிலில் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் கிடைப்பது சிரமமாக இருந்தது.
அறுவடைக்கு வானிலை சாதகமாக இருக்க வேண்டும். 2013-ம் ஆண்டு வறட்சி ஏற்பட்டது. இதனால் பயிற்சி பெற்ற தொழிலாளர்களை தக்கவைத்துக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேலையை விட்டு செல்பவர்கள் புதிதாக ஒருவருக்கு பயிற்சி கொடுத்துவிட்டு செல்லவேண்டும் என்று அறிவித்தேன். இதனால் எனது கிராமத்தை சேர்ந்த இளைஞர்களே இப்போது இயந்திரங்களை இயக்குவது, பராமரிப்பது போன்ற வேலைகளை செய்கின்றனர். விவசாயத்தை எளிதாக்க விவசாயிகள் புதிய தொழில்நுட்பததை கற்றுக் கொண்டு பயன்படுத்த வேண்டும். இயந்திரம் சார்ந்த விவசாயமாக இருக்கவேண்டும். தினமும் என்னிடம் அறுவடை இயந்திரங்கள் குறித்த தகவல்கள் பற்றி தெரிந்து கொள்ள பக்கத்து கிராமங்கள், பக்கத்து மாவட்டத்திலிருந்து ஆட்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இது வரை 44 பேருக்கு அறுவடை இயந்திரங்கள் வழங்கி இருக்கிறேன்.
என்னைப்போன்று 100 அறுவடை இயந்திர உரிமையாளர்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் எனது குறிக்கோள். அறுவடை இயந்திரங்கள் என் வாழ்க்கையை மாற்றிவிட்டது. நான் சிறியவனாக இருந்தபோது என் தந்தையோடு சேர்ந்து காய்கறிகளை விற்பனை செய்து வந்தேன். எப்படி காய்கறி விளைவிக்க வேண்டும் என்றும், அதை எப்படி விற்பனை செய்யவேண்டும் என்றும் எனக்கு சிறிய வயதிலேயே என் தந்தை கற்றுக்கொடுத்தார். எனது அறுவடை இயந்திரங்கள் தெலங்கானா, கர்நாடகாவிற்கும் சென்று அறுவடை செய்து வருகின்றன'' என்றார்.