ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அமன்ப்ரீத் சிங். இவர் பி.டெக். பட்டதாரி. தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் பால் அறிவியல் தொடர்புடைய பிரிவில் படிப்பை முடித்த சூட்டோடு, இஸ்ரேல் நாட்டிற்கு சென்றார். அங்குள்ள டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் பால் பொருள்களின் உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பாக கற்றறிந்தார்.
பின்னர் நாடு திரும்பிய அமன் ப்ரீத், முன்னணி பால் உற்பத்தி நிறுவனமான அமுல் மற்றும் நெஸ்லே நிறுவனங்களில் பணியாற்றினார். ஒரு நிறுவனத்தில் கைகட்டி வேலை பார்த்து ஒரு வட்டத்திற்குள் இருப்பதைவிட சுயமாக தொழில் தொடங்க வேண்டுமென்ற எண்ணம் அமன்ப்ரீத் சிங் மனதில் உதித்தது.
கடந்த 2015 ஆம் ஆண்டு அமன் ப்ரீத் ராஜஸ்தானில் கௌ ஆர்கானிக்ஸ் என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கினார். இயற்கையான முறையில் நெய், பால், எண்ணெய், வெல்லம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யத் தொடங்கினார். 50 ஏக்கரில் பலவிதமான தீவனப் பயிர்களையும் சாகுபடி செய்து மாடுகளுக்கு தீவனம் அளித்து வருகிறார்.
தடையின்றி பால் கிடைக்க உள்ளூர் விவசாயிகளோடு ஒப்பந்தம் செய்து கொண்டார் அமன் ப்ரீத். இயற்கை முறையில் நெய் மற்றும் பால் விற்பனை செய்து வருவதால், கெள ஆர்கானிக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு வரவேற்பு அமோகமாக இருந்தது. இதையடுத்து தனது சந்தையை அமன் விரிவுபடுத்தினார்.
அதன்படி, அமேசான் ஆன்லைன் தளத்தில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்யத் தொடங்கினார். சில்லறை விற்பனை கடைகளும் தொடங்கப்பட்டன. எனினும், 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரை எதிர்பார்த்த விற்பனை நடைபெறவில்லை. எனினும், கோவிட் 19 தொற்று காலத்தில் கௌ ஆர்கானிக்ஸ் நிறுவனத்தின் விற்பனை சூடுபிடித்தது. அமேசான், ஷாப்பிஃபை உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் கௌ ஆர்கானிக்ஸ் தயாரிப்புகள் விற்பனை அதிகரித்தது. அதன் பின், அமன் ப்ரீத்திற்கு தொழிலில் ஏறுமுகம் தான்.
அண்மையில் மற்றொரு புது முயற்சியை கையில் எடுத்தார் அமன் ப்ரீத். அதாவது மாட்டுச் சாணத்திலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையை கண்டறிந்து செயல்படுத்தியுள்ளார் அமன்ப்ரீத் சிங். அதன்படி மீத்தேனிலிருந்து மின்சாரத்தை தயாரிக்கும் ஒரு ஜெனரேட்டரை, அமன் ப்ரீத் குழு உருவாக்கியது.
பண்ணையில் கிடைக்கும் மாட்டுச் சாணத்தின் மூலம் மின்சாரம் தயாரின் நிறுவனத்துக்கு பயன்படுத்தத் தொடங்கினர். இதுகுறித்து அமன் ப்ரீத் கூறுகையில் "பண்ணையில் 40 கிலோவாட் திறனுள்ள இரண்டு பயோ காஸ் பிளான்ட்டுகளை நிறுவியுள்ளோம். மாடுகளிலிருந்து கிடைக்கும் சாணம், சிறுநீர் ஆகியவற்றை பிளான்ட்டுக்கு செல்வதுபோல் அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறோம். இந்த பிளான்ட்களிலிருந்து ஒருநாளைக்கு 80 கிலோவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. பண்ணை, அலுவலகம் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தும் மின்சாரத்தில் 70 சதவிகிதம் பண்ணையிலேயே உற்பத்தி செய்து கொள்கிறோம்" என்கிறார்.
தற்போது சாணத்தில் இருந்து மின்சாரம் தயாரிப்பதால், மாத மின் கட்டணத்தில் ரூ. 1.5-1.8 லட்சம் வரை மிச்சமாவதாக, பெருமிதத்துடன் அமன் ப்ரீத் கூறுகிறார்.