'கில்லிங் வீரப்பன்' படத்தில் வீரப்பன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சந்தீப் பரத்வாஜின் 'வீரப்பன்' தோற்றத்தை, இயக்குநர் ராம் கோபால் வர்மா வெளியிட்டு இருக்கிறார்.
சந்தன மரக் கடத்தல் வீரப்பன் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட சம்பவத்தை திரைப்படமாக எடுத்து வருகிறார் இயக்குநர் ராம் கோபால் வர்மா. இப்படத்துக்கு ‘கில்லிங் வீரப்பன்’ என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.
கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தியில் இப்படம் வெளியாக இருக்கிறது. இதில் கன்னட நடிகர் ஷிவ் ராஜ்குமார் நாயகனாக நடிக்கிறார். வீரப்பன் பாத்திரத்தில் நடிக்கும் நடிகருக்கான தேர்வு நடைபெற்று வந்தது. இறுதியில் சந்தீப் பரத்வாஜ் வீரப்பன் கதாபாத்திரத்தில் நடிக்க உறுதிச் செய்யப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் சந்தீப் பரத்வாஜ், வீரப்பன் வேடத்தில் இருக்கும் புகைப்படங்களை இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
'கில்லிங் வீரப்பன்' குறித்து ராம்கோபால் வர்மா, "இந்தப் படம் வீரப்பனின் தனிப்பட்ட கதையைக் காட்டாது. மாறாக வீரப்பனை கொலை செய்தவரைப் பற்றிய படமாக இருக்கும். வீரப்பனைப் பற்றிய அனைத்து ஆவணங்களையும் ஆராய்ச்சி செய்து புதிய கோணத்தில் இப்படத்தை எடுக்கிறேன். ஷிவ் ராஜ்குமாரை இதில் நடிக்க வைக்க ஒரு காரணம் உள்ளது. ஷிவ் ராஜ்குமாரின் தந்தை ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்றார். தற்போது ஷிவ் ராஜ்குமாருக்கு வீரப்பனை பழிவாங்க திரையில் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது” என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.