கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனைக் கைதி நேற்று உயிரிழந்ததைத் தொடர்ந்து சிறை நிர்வாகம் மீது குற்றசாட்டு எழுப்பி சக கைதிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம், லிங்காபுரம் அருகே உள்ள ஆலூரைச் சேர்ந்தவர் ஏ.கருப்புசாமி. கடந்த 2008-ம் ஆண்டு, ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், நேற்று காலை இறந்து கிடந்தார். அவரது சடலம், பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
கருப்புசாமி உயிரிழந்தது 
குறித்து அவரது மனைவி, உறவினர் களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து, மருத்துவ மனையில் அவர்கள் திரண்ட னர். அப்போது, தனது கணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய கருப்பு சாமியின் மனைவி பழனியம்மாள், உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
உணவு சாப்பிட மறுப்பு
கருப்புசாமி சிறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுவிட்டதாக கைதிகளிடம் தகவல் பரவியதை அடுத்து, சுமார் 300-க்கும் மேற்பட்ட கைதிகள் காலை உணவைச் சாப்பிட மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் சிலர் மரங்களின் மீது ஏறி அமர்ந்தும், மதில் சுவர் மற்றும் கட்டிடத்தின் மீது ஏறி அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைதிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து சிறையில் ஆயுதப்படை போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளிடம் சிறை கண்காணிப்பாளர் பழனி தலை மையிலான போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
‘கருப்புசாமியின் உயிரிழப்புக்கு சிறை நிர்வாகம் காரணம் இல்லை. இதயக் கோளாறு காரணமாக உயிரிழந்துவிட்டார். அவரது சடலம் உரிய முறையில் பிரேதப் பரிசோதனை செய்து உண்மை தெரிவிக்கப்படும்’ என சமாதானப்படுத்தினர். சிறை நிர்வாகத்தின் சமரசத்தைத் தொடர்ந்து கைதிகள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு உணவருந்தினர்.
செல்போன்கள்
இதுகுறித்து சிறை கண்காணிப் பாளர் பழனி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘சிறையில் உள்ள கைதிகள் சிலரிடம் செல்போன் பயன்பாடு இருப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அதில், அய்யப்பன், செந்தில், சுரேஷ், மகேந்திரன், பாண்டியன், கந்தசாமி, சரவணன், ஜீவானந்தம், சேதுபதி ஆகிய கைதிகள் பதுக்கி வைத்திருந்த 8 செல்போன்கள், 3 சிம்கார்டுகள், 3 சார்ஜர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனிடையே, சிறையில் அடைக்கப்பட்டிருந்த கருப்புசாமி இதயக் கோளாறு காரணமாக உயிரிழந்தார். ஏற்கெனவே, செல்போன் பறிமுதல் நடவடிக்கை யால் அதிருப்தியில் இருந்த சம்பந்தப்பட்ட கைதிகள், சிறை யில் உள்ள ஏனைய கைதிகளி டம் தவறான தகவலைப் பரப்பிவிட்டது தெரியவந்துள் ளது. கைதிகளிடம் உண்மையை எடுத்துக் கூறிய பின்னர், அவர்கள் காலை உணவைச் சாப்பிட்டனர். உயிரிழந்த கருப்புசாமியின் மரணம் குறித்து, பிரேதப் பரிசோதனை முடிவில் தெரிய வரும்’ என்றார்.
காவல் ஆணையரிடம் மனு
ஆயுள் தண்டனை கைதி உயிரிழந்தது குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பி.யு.சி.எல்.) வழக்கறிஞர்கள், காவல் ஆணையரிடம் நேற்று மனு அளித்தனர். ‘தேசிய மனித உரிமை ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, இறந்த கருப்புசாமியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்வதை வீடியோ பதிவு செய்ய வேண்டும். மாஜிஸ்திரேட் தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என மனுவில் அவர்கள் வலியுறுத்தி இருந்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் ஆணையர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.