'ரஜினி முருகன்' படத்தைத் தொடர்ந்து உருவாக இருக்கும் சிவகார்த்திகேயன் திரைப்படத்தை அதிக பொருட்செலவில் உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, ராஜ்கிரண், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'ரஜினி முருகன்'. இமான் இசையமைத்து இருக்கும் இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
தற்போது 'ரஜினி முருகன்' படத்தின் இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்திற்குப் பிறகு, அட்லீயின் இணை இயக்குநர் பாக்யராஜ் இயக்கத்தில் நடித்துவிட உறுதி செய்தார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் ராஜா இப்படத்தை தயாரிக்க இருக்கிறார். அனிருத் இசையமைக்க இருக்கிறார் என்பது உறுதியாகி இருக்கிறது.
இந்நிலையில், இதுவரை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்களைவிட மிக அதிகமான பொருட்செலவில் இப்படத்தை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு. 'ஐ' படக்குழுவின் இயக்குநர் ஷங்கர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரையும் தவிர மற்ற அனைவருமே இப்படத்தில் பணியாற்ற இருக்கிறார்கள் என்கிறது கோலிவுட் வட்டாரம். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் முதல் சிவகார்த்திகேயன் படமாக இது அமைய இருக்கிறது.
மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படாத நிலையில், இப்போதே பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் படத்தின் உரிமையை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.