இந்தி திரையுலகில் பிரபல ஒளிப்பதிவாளரான நீரவ்ஷா, விஷால் நடித்த ‘சண்டக்கோழி’ படம் மூலம் தமிழ் திரையுலக பிரவேசத்தை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து தமிழில் ‘போக்கிரி’, ‘பில்லா’, ‘எங்கேயும் காதல்’, ‘காவியத்தலைவன்’ உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.
இயக்குனர் விஜய் இயக்கிய ‘மதராசப்பட்டினம்’, ‘சைவம்’, ‘தலைவா’ உள்ளிட்ட படங்களில் இவரது பங்களிப்பு பாராட்டும்படியாக இருந்தது. இயக்குனர் ஏ.எல். விஜய், விஷ்ணுவர்தன் ஆகிய இயக்குனர்களின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் இவர்தான். தமிழ் மற்றும் ஹிந்தி என கலக்கிவரும் இவர் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினி படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.
ஷங்கர் இயக்கும் ‘எந்திரன்-2’ படத்திற்காக ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் நீரவ்ஷா. ‘எந்திரன்’ முதல் பாகத்திற்கு ரத்னவேல் ஒளிப்பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கலைப்புலி தாணு தயாரிக்க ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க ரஜினி தயாராகிவருகிறார். ஆகஸ்டில் தொடங்கி மூன்று மாதங்களில் இப்படத்தை முடித்துவிட்டு ரஜினி ஓய்வு எடுக்கவுள்ளார். அதன்பின்னர் டிசம்பர் இறுதியில் ‘எந்திரன்-2’வில் படத்தில் நடிக்கவிருக்கிறார். ரஜினியின் பிறந்தநாளில் இப்பட குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.