சோழிங்கநல்லூர் தொகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட வலியுறுத்தி வரும் 26-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட தென் மண்டல திமுக செயலாளர் மா.சுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கையில், "அதிமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதலாக தமிழகத்தில் இதுவரை எவ்விதமான அடிப்படை வசதிகளையும் செய்யாமல், கண்டும் காணாமல் இருந்து வருவதை அனைவரும் நன்கறிவர்.
குறிப்பாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் என்று ஒன்று இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
ஜெயலலிதா அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு சென்னை மாநகராட்சியோடு இணைந்த எந்த பகுதியிலும் மக்களின் அன்றாட தேவைகள் கூட எதையும் நிறைவேற்றாமல் தூங்கி வழிந்து கொண்டிருக்கிறது.
ஜெயலலிதா அரசையும், மாநகராட்சி நிர்வாகத்தையும் வலியுறுத்தி வருகின்ற 26.6.2015-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 11 வரை சோழிங்கநல்லூர் சிக்னல் அருகில் கலைஞர் சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
எனது தலைமையில் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக நிர்வாகிகளும், செயல்வீரர்களும், பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்று தத்தமது கண்டனத்தை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.