மாணவர் சமுதாயம் முன்னேற்ற மடைய தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில், எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கும் விழா சேலத்தில் நேற்று நடந்தது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், 780 மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி பேசியதாவது:
மாணவர்கள்தான் வீட்டின், நாட்டின் எதிர்காலத்தை தீர்மா னிப்பவர்கள். எனவேதான் திமுக ஆட்சிக்கு வரும்போது மாணவர்களின் முன்னேற்றத் துக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்படுகிறது. பிற்படுத் தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர் களுக்கு பட்டப்படிப்பு வரை திமுக ஆட்சி காலத்தில் இலவச கல்வி அளிக்கப்பட்டது.
தொழிற்கல்விக்கான நுழைவுத் தேர்வு திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது. கடந்த 2007-ம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற இளைஞரணி மாநாட்டில் இளைஞ ரணி அறக்கட்டளை தொடங்கப் பட்டது.
அன்று முதல் 7 ஆண்டாக எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்வில் தமிழக அளவில் மாநில மற்றும் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க திமுக தலைவர் கருணாநிதி கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டம்தான் காரணம். கடந்த 2011-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வி, ஆட்சி மாற்றம் வந்தவுடன் அதிமுக அரசால் ரத்து செய்யப்பட்டது. உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி சமச்சீர் கல்வி தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது. மாணவர் சமுதாயம் முன்னேற்றமடைய தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.