விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தொடர்பான வட்டி மானியத் திட்டம், தற்போதுள்ள நிலையிலேயே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன் திட்டத்தில் வட்டி மானியம் திட்டத்தில் மத்திய அரசு மாற்றம் செய்யவுள்ளதாக செய்திகள் வருகின்றன. வட்டி மானியம் வழங்குவது தொடர்பாக தற்போதுள்ள நடைமுறை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் 29-ம் தேதி தமிழக அரசு சார்பில் தங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அந்தக் கடிதத்துக்கு தங்களின் பதிலை இன்னும் எதிர்பார்த்துள்ளோம்.
பயிர்க் கடன்களுக்கான வட்டி மானிய திட்டத்தில் 2 முக்கிய மாற்றங்களை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தெரி கிறது. முதலாவதாக, வங்கிகள் முன்னுரிமை பிரிவுக்கு வழங்கும் அடிப்படை விகிதத்துடன் இணைந்த வட்டி விகிதப்படி கடன் வழங்க அனுமதிப்பது. இரண்டா வது, விவசாயிகள் கடனை திருப் பிச் செலுத்திய பின் மானியத் தொகையை அவர்கள் வங்கிக் கணக்கில் நேரடி மானிய திட்டம் மூலம் விநியோகிப்பதாகும்.
வேளாண்துறை தற்போது சந்தித்து வரும் நிச்சயமற்ற சூழலில் அடிப்படை விகிதத்துடன் இணைந்த தற்போதைய வட்டி விகிதங்களை கணிசமாக அதிகரிப்பதும் விவசாய கடன்களுக்கான சலுகைகளை குறைப்பதும் தேவையற்ற மற்றும் பிற்போக்கான நடவடிக்கையாக அமைந்துவிடும். விவசாயிகள் அதிக வட்டியை செலுத்தி, அதன்பின் வட்டி மானியத்தை நேரடி பணப்பரிமாற்ற திட்டத்தின் மூலம் பெறும் முறைக்கு மாறுவது திட்டத்தை தேவையற்ற சிக்கலுக்கு உள்ளாக்கிவிடும். மேலும் விவசாயி களின் துயரத்தையும் அதிகரித்து விடும்.
பழைய முறைப்படி வங்கிகள் கடன் வழங்கும்போது அந்தக் கட னுக்கு ஆரம்ப கட்டத்திலேயே விவ சாயிகள் சலுகை பெற்று வந்தனர். இந்தச் சூழலில் நேரடி பணப் பரிமாற்ற முறைக்கு மாறுவது விவசாயிகளுக்கு குறித்த காலத் தில் கடன் கிடைப்பதிலும், தேவைப் படும் விவசாயிகளை கண்டறியும் நடைமுறையிலும் பெரிய நன் மையை ஏற்படுத்தாது. எனவே, புதிய திட்டத்தை தீவிரமாக பரிசீலிப்பது அவசியம்.
கடந்த ஏப்ரல் 10-ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில், மாற்றங்கள் கொண்டுவரப்படும் வரை தற்போதுள்ள வட்டி மானிய திட்டம் தொடர்ந்து நீடிக்கும் என்றும், இந்தச் சலுகை ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வேளாண்துறைக்கு போதிய கடன் வழங்கி விவசாயத்துறைக்கு ஊக்கம் அளிக்க வேண்டிய இந்த நேரத்தில், கீழ்நிலையில் உள்ள உண்மை நிலவரங்களை ஆரா யாமல், மானிய திட்ட முறையில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வருவது அபாயமாகிவிடும்.
தமிழகத்தில் கோடைக்கால சாகு படி மிகவும் குறைந்த அளவே நடக் கிறது. ஜூனில் துவங்கும் தென் மேற்கு பருவமழை, தொடர்ந்து வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் விவசாயிகள் அதிகளவில் பயிர்க் கடன்களை வாங்குகின்றனர். இந்நிலையில், வட்டி மானிய திட் டத்தை நீட்டிப்பது குறித்து முடி வெடுக்க மேலும் தாமதம் ஏற்பட் டால், அது தமிழகம் மட்டுமில்லா மல் நாடு முழுவதும் வேளாண் துறையை கடுமையாக பாதிக்கும்.
எனவே, இந்த விஷயத்தில் தாங்கள் தலையிட்டு தற்போதுள்ள வட்டி மானியத் திட்டம் அதே வடி வத்தில் நீடிக்கும் வகையில் செய்ய வேண்டும். இத்திட்டத்தில் செய்யப் படும் உத்தேச மாற்றங்கள் குறித்து தேசிய வளர்ச்சிக் குழு கூட்டம் அல் லது நிதிஆயோக் நிர்வாக குழுவில் விவாதிக்கலாம். அதில் கருத்தொற் றுமை ஏற்பட்ட பின் புதிய மாற்றங்களுடன் இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்