சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சட்டசபை உறுப்பினர் பதவியை இழந்த ஜெயலலிதாதான், தமிழக அரசை தொடர்ந்தும் நடத்தி வருவதாக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சட்டசபையில் பதிவு செய்துள்ளார். வருமானத்துக்கு அதிகமாக ரூ66 கோடி சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் சட்டசபை உறுப்பினர் என்ற தகுதியை இழந்தார். இதைத் தொடர்ந்து முதல்வர் பதவியும் பறிபோனது. பின்னர் புதிய முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார். இருந்த போதும் தொடர்ந்தும் அதிமுகவினர் "மக்கள் முதல்வர்" ஜெயலலிதா என்றுதான் கூறி வருகின்றனர்.
இதனையே தமிழக சட்டசபையில் முதல்வர் பன்னீர்செல்வமும் "மக்களின் முதல்வர் ஜெயலலிதா" என்றே கூறியிருக்கிறார். இது சட்டசபை குறிப்புகளிலும் பதிவாகி இருக்கிறது. குறிப்பாக சட்டசபையில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயிருப்பதாக மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. சவுந்திரராஜன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், இந்த அரசாங்கம் தொடக்கம் முதலே ஜெயலலிதாவின் தலைமையின் கீழ்தான் நடைபெறுகிறது. நல்லாட்சிக்கான சிறப்பான உதாரணத்துடன் இந்த அரசு இயங்குகிறது என்றும் கூறியிருக்கிறார். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று எம்.எல்.ஏ. பதவியை இழந்த ஜெயலலிதாவின் தலைமையின் கீழே தமது அரசு இயங்குகிறது என்று முதல்வர் பன்னீர்செல்வம் சட்டசபையில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.