முதல் டெஸ்ட் போட்டியில் வாக்குவாதங்களில் ஈடுபட்ட கோலி, தவன், வார்னர் ஆகிய மூவருக்கும் ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
அடிலெய்டில் நடந்த இந்தியா– ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளன்று வருண் ஆரோன் பந்துவீச்சில் டேவிட் வார்னர் விக்கெட்டை பறிகொடுத்தார். அப்போது ஆரோன் ஆக்ரோஷமாக துள்ளிக்குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
ஆனால் அந்தப் பந்து நோ-பால் ஆனதால் வார்னர் அவுட் ஆகவில்லை. இதைத் தொடர்ந்து ஆரோனைப் பார்த்து கமான் கமான் என்று வெறுப்பேற்றினார் வார்னர். இதனால் தவனுக்கும் வார்னருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோலி தலையிட்டு வீரர்களை சமாதானப்படுத்தினார்.
பிறகு ஸ்மித்தின் எல்பிடபிள்யூ-வுக்காக நடுவரிடம் அவுட் கேட்டார் ரோஹித் சர்மா. அப்போது தேவையில்லாமல் ரோஹித் சர்மாவைப் பார்த்து ஸ்மித் ஏதோ கூற, அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு கோலியும் ஸ்மித்திடம் இது தொடர்பாக பேசினார்.
இந்த இரு சம்பவங்களைத் தொடர்ந்து கோலி, தவன், வார்னர் ஆகிய மூவருக்கும் ஐசிசி அபராதம் விதித்துள்ளது. வார்னர் ஆட்டத் தொகையிலிருந்து 15 சதவீதமும் கோலி, தவன் ஆகிய இருவரும் தலா 30 சதவீதமும் அபராதம் செலுத்தவேண்டும்.