உலக அளவில் வேளாண் விளைபொருட்களின் விலையில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. விளைச்சல் அமோகமாக இருப்பது முக்கியமான காரணம். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் வேளாண் விளைபொருட்கள் விலை குறையக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. விளைச்சல் அதிகரித்தாலும் நஷ்டம், குறைந்தாலும் நஷ்டம் என்பது இந்திய விவசாயிகளுக்கு எழுதப்படாத விதியாகத் தொடர்வது துயரம்.
பருத்தி, ரப்பர், சோளம், சர்க்கரை ஆகியவற்றின் விலை கடந்த 6 மாதங்களில் 15% முதல் 20% வரை சரிந்துவருகிறது. சர்வதேச அளவில் இவற்றுக்கான கேட்பு குறைந்துவிட்டதால் இந்தியாவி லிருந்து இவற்றை ஏற்றுமதி செய்து லாபம் சம்பாதிக்க முடியாது. உள்நாட்டில் உற்பத்தி கணிசமாக இருப்பதுடன் பிற நாடுகளிலிருந்து விலை மலிவாகக் கொண்டுவந்து குவிப்பதும் அதிகமாக இருக்கிறது. உத்தரப் பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களின் சர்க்கரை ஆலைகள் ஒரு கிலோ சர்க்கரையை உற்பத்தி செய்யத் தங்களுக்கு ரூ. 32 செலவாவதாகவும் விற்பனை மூலம் ரூ. 27 முதல் ரூ. 28 வரை மட்டுமே கிடைப்பதாகவும் கூறியுள்ளன. அத்துடன் கரும்புக்கான தொகையை முழுதாகத் தங்களால் தர முடியாது என்றும், பாதியை ஒரு மாதம் கழித்தும், எஞ்சிய தொகையை ஓராண்டுக்குள்ளும் தருவ தாகக் கூறுகின்றன. சர்க்கரை உற்பத்தியைக் குறைத்துக்கொண்டு, எத்தனாலை அதிகம் தயாரித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் கோருகின்றன.
ரப்பர் விலை வீழ்ச்சியால் கேரள ரப்பர் சாகுபடியாளர்கள் பாதிக்கப் பட்டுள்ளார்கள் என்றும் இறக்குமதியாகும் ரப்பர் மீது இறக்குமதித் தீர்வை விதிக்க வேண்டும், ஏற்றுமதிக்கு மானியம் அளிக்க வேண்டும் என்றும் அந்த மாநிலம் கோரிக்கை விடுத்திருக்கிறது. பருத்தியும் இப்போது அரசு நிர்ணயித்துள்ள விலையைவிடக் குறைவாக விற்கிறது. பணப் பயிர்களை மொத்தமாக வாங்கும் வாடிக்கையாளர்களைச் சாகுபடியாளர்களே நேரில் சந்தித்து விற்பதற்கான நடைமுறைத் தடைகளை அரசு நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப் பட்டிருக்கிறது.
இப்போது அரசு செய்ய வேண்டியது என்ன? வேளாண் பொருட் களுக்கான குறைந்தபட்சக் கொள்முதல் விலையை மேலும் சிறிது உயர்த்துவது, இறக்குமதிக்குத் தடை விதிப்பது, குறைந்த வட்டிக்குக் கடன்களை வழங்குவது போன்ற வழக்கமான செயல்கள் முக்கியம்தான். கூடவே, வேளாண் சந்தைக் கட்டமைப்பிலேயே மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது மிக மிக அவசியமானது என்று நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள். தேசிய அளவில் வேளாண் பொருட்களை விவசாயிகள் சந்தைப்படுத்தும் வசதியை ஏற்படுத்த வேண்டும், வேளாண் விளைபொருள் பரிமாற்றத்துக்கு உள் நாட்டில் தடை ஏதும் இருக்கக் கூடாது, முன்பேர வர்த்தகத் தடைச் சட்டத்தை விவசாயிகளின் நலனுக்கேற்பத் திருத்த வேண்டும். உரம் உள்ளிட்டவற்றுக்கான ரொக்க மானியங்களின் பலனை நிறுவனங் களுக்கு அளிப்பதற்குப் பதில் விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு அவர்களுடைய விளைச்சல் மீது 50% லாபம் கிடைப்பதை உறுதி செய்வோம் என்று வாக்குறுதி தரப்பட்டிருந்தது.
ஆனால், முந்தைய அரசுகளைப் போலவே புதிய அரசும் தனது மறதிப் பட்டியலில் விவசாயத்துக்கு முதலிடத்தை அளித்திருக்கிறது.
பிரதானமாக விவசாய தேசமாக இருந்த இந்தியா, விவசாயத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, எந்த மாதிரியான வளர்ச்சியை அடையப்போகிறது என்ற கேள்விதான் பூதாகரமாக எழுகிறது.