BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday 12 December 2014

லிங்கா – திரை விமர்சனம்





நடிகர் : ரஜினி
நடிகை : அனுஷ்கா
இயக்குனர் : கே.எஸ் ரவிக்குமார்
இசை : ஏ.ஆர்.ரகுமான்
ஓளிப்பதிவு : ஆர் ரத்தினவேலு
சோலையூர் கிராமத்தில் ஊர் தலைவராக இருந்து வருகிறார் விஸ்வநாத். இவரை அந்த ஊர் மக்கள் அனைவரும் மதித்து, இவருடைய பேச்சுக்கு கட்டுப்பட்டு வருகிறார்கள். இந்த ஊரின் எம்.பியான ஜெகபதி பாபு அரசு அதிகாரியான பொன்வண்ணனை கொலை செய்கிறார். இதில் பொன்வண்ணன் உயிர் பிரிவதற்குமுன் விஸ்வநாத்திடம் ஊரில் பல ஆண்டுகளாக மூடியிருக்கும் கோயிலை திறக்க வேண்டும் என்று கூறிவிட்டு இறக்கிறார்.
அந்த கோயிலை திறக்க வேண்டுமானால் கோயிலை கட்டிய லிங்கேஸ்வரனின் வாரிசுகள் தான் திறக்க வேண்டும். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியாத நிலையில் விஸ்வநாத்தின் பேத்தியான அனுஷ்கா லிங்கேஸ்வரனின் வாரிசான லிங்கா என்னும் ரஜினியை தேடி செல்கிறார்.
சென்னையில் ரஜினி தன் நண்பர்களான சந்தானம், கருணா ஆகியோருடன் திருட்டு தொழில் செய்து வருகிறார். இவர்கள் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டு ஜெயிலிலுக்கு செல்கிறார்கள். இவர்களை அனுஷ்கா தன் முயற்சியால் ஜெயிலில் இருந்து விடுவிக்கிறார். அதன்பின்பு ரஜினியிடம் லிங்கேஸ்வரனின் பேரனான நீங்கள் சோலையூர் கிராமத்துக்கு வரவேண்டும் என்றும் கோவிலை திறக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அதற்கு ரஜினி என் தாத்தா எனக்காக ஏதும் செய்யவில்லை ஆதலால் நான் வரமாட்டேன் என்று கூறி மறுக்கிறார்.
அதன்பின்பு ரஜினி தன் நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு 1.5 கோடி மதிப்புள்ள ஒரு நகையை திருடுகிறார். இந்த நகையை சேட்டான மதன்பாப்பிடம் கொடுக்கிறார். இவரை போலீசில் சிக்க வைக்கிறார் அனுஷ்கா. இதையறியும் ரஜினி, மதன்பாப்பால் நாமும் போலீசில் மாட்டிக் கொள்வோம் என்று பயந்து அனுஷ்காவுடன் சோலையூர் கிராமத்திற்கு செல்கிறார்.
அங்கு ஊர் தலைவரான விஸ்வநாத், ரஜினியிடம் இந்த கோயிலில் உள்ள லிங்கம் மரகத கல்லால் செய்யப்பட்டது. இதை நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகிறார். பல கோடி மதிப்புள்ள மரகத லிங்கத்தை திருடி விற்றால் வாழ்க்கையில் செட்டிலாகி விடலாம் என்று எண்ணி கோயிலுக்கு செல்கிறார். அங்கு கோயிலுக்கு யாரோ சென்று விட்டார்கள் என்று நினைத்து மக்கள் கோயிலை சுற்றி வளைக்கிறார்கள். இதிலிருந்து தப்பிப்பதற்காக ரஜினி கோயிலை திறந்து பூஜை செய்கிறார். அப்போது மக்களிடம் விஸ்வநாத், ரஜினியின் தாத்தா லிங்கேஸ்வரனின் பெருமைகளை எடுத்து கூறுகிறார். இதைக்கேட்ட ரஜினி, தன் தாத்தாவின் உயர்ந்த எண்ணத்தையும் உள்ளத்தையும் எண்ணி வருந்துகிறார். இதனால் இந்த ஊரை விட்டு செல்ல நினைக்கிறார்.
அப்போது விஸ்வநாத், அரசு அதிகாரியான பொன்வண்ணனை யாரோ கொலை செய்து விட்டதாகவும், இந்த ஊரில் உள்ள பாலத்திற்கும், கோயிலுக்கும் ஆபத்து இருக்கிறது என்றும் கூறுகிறார். நீங்கள் கொலை செய்தவர்களையும், இந்த ஊரையும் காக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
அதன்பிறகு இந்த ஊரின் எம்.பி.யாக இருக்கும் ஜெகபதிபாபு, ஊரில் உள்ள பாலத்தை இடித்து புதிய பாலம் கட்டி அதில் ஊழல் பண்ணலாம் என்று திட்டமிட்டு வருவது ரஜினிக்கு தெரிய வருகிறது. இறுதியில் ஜெகபதிபாபுவின் திட்டத்தை முறியடித்தாரா? பாலத்தை காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.
சூப்பர் ஸ்டாரின் அறிமுக பாடல் அட்டகாசமாக ஆரம்பிக்கிறது. வழக்கம்போல் தன் தோளில் மொத்தப் படத்தையும் சுமந்து கொண்டு ரசிகர்களை திருப்தி செய்கிறார். இரண்டு கதாபாத்திரத்திலும் அவருக்கே உரிய ஸ்டைலில் அசத்தியிருக்கிறார். கம்பீரமான நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். இவர் பேசும் வசனங்கள் எல்லாம் திரையில் தீ பறக்கிறது. இவரின் சின்ன சின்ன ரியாக்ஷன்ஸ் மிகவும் ரசிக்கும்படி அமைந்துள்ளது.
மற்ற கதாநாயகிகள் போல் பாடல் காட்சிகளுக்கு வந்து செல்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார் அனுஷ்கா. இரண்டாம் பாதியில் அழகாக வந்து அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சோனாக்‌ஷி சின்ஹா.
சந்தானத்தின் காமெடி படத்தில் பெரிதும் வரவேற்பை பெற்றிருக்கிறது. ரஜினியுடன் இவர் சேர்ந்து திருடும் ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்.
குறுகிய காலத்தில் கதை, திரைக்கதை அமைத்து ரசிகர்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்றார் போல் சூப்பரான படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரால் மட்டுமே இயக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். இவரது அனுபவம் திரையில் ஒவ்வொரு காட்சிகளிலும் நன்றாகவே தெரிகிறது. 6 மாத காலத்தில் நிறைய கதாபாத்திரங்களை வைத்து விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து பிரம்மாண்டான பாடல் காட்சிகளை உருவாக்கி ரசிகர்களுக்கு விருந்து படைத்திருப்பது வியப்பில் ஆழ்த்துகிறது.
ரத்தினவேலு என்னும் ராண்டி, ராட்டினம் போல் அணையின் பிரம்மாண்ட காட்சியை நம் கண்முன் நிறுத்துகிறார். ரெயில் சண்டை காட்சிகள் ஒளிப்பதிவில் மிரட்டியிருக்கிறார். இரண்டு காலங்களுக்கு இடையேயான காட்சிகளை ஒளிப்பதிவு செய்வதை திறமையாக கையாண்டிருக்கிறார்.
பிரம்மாண்டத்திற்கு மகுடம் சூட்டும் விதமாக அமைந்திருக்கிறது ஏ.ஆர்.ரகுமானின் இசை. இந்தியனே… பாடல் ஒவ்வொரு ரசிகர்கள் மனதிலும் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘லிங்கா’ ரசிகர்கள் மனதில் நிற்கிறார் கிங்கா.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies