ஹரியாணா மாநிலத்தில் சர்ச்சைக்குரிய சாமியார் ராம்பாலை போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர். ஹரியாணாவின் ஹிஸார் மாவட்டத்தில் உள்ள பர்வாலா நகரில் ஆசிரமம் நடத்தி வரும் சாமியார் ராம்பால் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் பதிவாகியிருந்தன. இந்த வழக்குகளில் அவரைக் கைது செய்வதற்காக போலீஸார் செவ்வாய்க்கிழமை அந்த ஆசிரமத்துக்குச் சென்றனர். எனினும், ராம்பாலின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் சாமியாரைக் கைது செய்ய இயலவில்லை.
இந்நிலையில், ஆசிரமத்துக்குள் இருந்த 15,000 பேரை போலீஸார் புதன்கிழமை வெளியேற்றினர். அதன் பிறகு, சாமியார் ராம்பாலைக் கைது செய்தனர். அவரை வியாழக்கிழமை, ஹிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக பானிபட் காவல்துறைக் கண்காணிப்பாளர் சதீஷ் பாலன் தெரிவித்தார்.