மியான்மரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு ஆசியான் நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். புரூணே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பின்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய 10 நாடுகள் இடம்பெற்றுள்ள "ஆசியான்' அமைப்பின் உச்சிமாநாடு மியான்மர் தலைநகர் நேப்பிடாவில் புதன்கிழமை நடைபெற்றது. தற்போது மியான்மரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆசியான் உச்சிமாநாட்டில் ஹிந்தி மொழியில் உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:
இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி, தொழில்மயமாக்கம், வர்த்தகம் ஆகியவற்றுக்கான புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவும், ஆசியானும் நெருங்கிய கூட்டாளிகளாக இருக்க முடியும்.
இந்த அமைப்புடனான எங்கள் நாட்டின் உறவுகளுக்கு நான் தனிப்பட்ட கவனம் செலுத்துவேன் என்று உறுதியளிக்கிறேன். இந்தியாவில் புதிய பொருளாதாரப் பாதையை நாங்கள் தொடங்கியுள்ள நிலையில் இந்தப் புதிய சூழலுக்கு (முதலீடு செய்வதற்கு) உங்களை வரவேற்கிறோம். நமது உறவில் நெருடலான எந்த அம்சமும் இல்லை. உலகில் ஊக்கமளிக்கக் கூடிய வாய்ப்புகளையும் சவால்களையும் நாம் ஒரேமாதிரியாகக் காண்கிறோம். இந்தியா-ஆசியான் உறவுகளுக்கான வாய்ப்புகள் தற்போது இருப்பதை விட பல மடங்கு அதிகமாக உள்ளன.இந்தப் பிராந்தியத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் மேம்படுத்துவதில் தங்கள் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியாவும், ஆசியானும் ஆர்வமாக உள்ளன. எனது அரசு பதவிக்கு வந்து 6 மாதங்களாகிறது. கீழை நாடுகளுடனான எங்கள் தோழமை அதிகரித்துள்ளது, இந்தப் பிராந்தியத்துக்கு நாங்கள் அளிக்கும் முக்கியத்துவத்தின் பிரதிபலிப்பாகும்.
ஆசியான் அமைப்பில் இடம்பெற்றுள்ள 10 நாடுகளில் ஒவ்வொன்றுடனும் இந்தியா நெருங்கிய இருதரப்பு உறவுகளைக் கொண்டுள்ளது. அதே முக்கியத்துவத்துடன் ஆசியானுடனான உறவுகளை இந்தியா கருதுகிறது.இன்றைய காலகட்டத்தில் நேரடித் தொடர்பை விட தகவல் தொடர்புக்கே அதிக அவசியம் ஏற்பட்டுள்ளது என்றார் மோடி.ஆசியான் அமைப்பின் மொத்த வர்த்தகத்தில் வெறும் 3 சதவீதப் பங்கை மட்டுமே அந்த அமைப்பின் நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ளது. தற்போது, இந்தியா-ஆசியான் நாடுகளிடையிலான வர்த்தகத்தின் அளவு இந்திய மதிப்பில் சுமார் ரூ.4.5 லட்சம் கோடியாக உள்ளது. இதை அடுத்த ஆண்டுக்குள் (2015) சுமார் ரூ.6 லட்சம் கோடியாக அதிகரிக்க இரு தரப்பும் இலக்கு நிர்ணயித்துள்ளன.
சீனாவுக்கு மறைமுக அறிவுரை :
ஆசியான் உச்சி மாநாட்டில் மோடி உரையாற்றியபோது, அனைத்து நாடுகளுக்கும் கடல்சார் விவகாரங்களில் உலகளாவிய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது என்று வலியுறுத்தினார். அவர் எந்த நாட்டின் பெயரையும் அப்போது குறிப்பிட்டுப் பேசவில்லை என்றாலும், சீனா தனது அண்டை நாடுகளான ஜப்பான், வியத்நாம், பிலிப்பின்ஸ் ஆகியவற்றுடன் கடல்சார் எல்லைத் தகராறுகளைக் கொண்டுள்ளதால் மோடியின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. சீனாவுக்கு அவர் மறைமுகமாக அறிவுரை கூறியதாகவே இந்தக் கருத்து அமைந்துள்ளது.