"ஜெனீவாவில், உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தில், உணவுப் பாதுகாப்புத் திட்டம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. இந்த விவகாரத்தில் எவ்வித சமரசத்துக்கோ, நிபந்தனைகளுக்கோ இடம் கொடுக்காமல் இந்தியா இதனைச் சாதித்துள்ளது' என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஜெனீவாவில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் (டபிள்யூடிஓ) பொதுக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட வர்த்தக இணக்க ஒப்பந்தத்தில் (டிஎஃப்ஏ), இந்தியாவின் வலியுறுத்தலை ஏற்று, வளரும் நாடுகளின் உணவுப் பாதுகாப்புக்குத் திட்டத்துக்கு நிரந்தர உத்தரவாதம் அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மக்களவையில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெள்ளிக்கிழமை தானே முன்வந்து அறிவித்ததாவது: ஜெனீவா கூட்டத்தில் இந்தியாவுக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்று, வளரும் நாடுகளில் உணவுப் பாதுகாப்புப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும்வரை, அந்நாடுகள் பொது விநியோகத்துக்காக எவ்வித வரம்புமின்றி தேவையான உணவு தானியங்களைத் தொடர்ந்து சேமித்துவைக்கவும், மானியம் வழங்கவும் ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்தியா போன்ற வளரும் நாடுகள் பொது விநியோகத்துக்காக தாராளமாக உணவு தானியங்களைச் சேமித்து வைப்பதோடு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையையும் தங்குதடையின்றி வழங்க முடியும். இதற்காக, வளரும் நாடுகள் மீது பிற நாடுகள் அபராதம் விதிக்க முடியாது. இந்த வெற்றியை, இந்தியா எதனையும் விட்டுக்கொடுக்காமல், வேறு நிபந்தனைகள் எதற்கும் உட்படாமல் சாதித்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் வாழும் லட்சக்கணக்கான ஏழை விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்பது உயிர்நாடி போன்றது. ஆகையால்தான், இந்தப் பிரச்னையில் முரண்பட்ட அமெரிக்காவிடம், கடந்த மாதம் இந்தியா சரியாக எடுத்துக்கூறி தனது நிலைப்பாட்டுக்கு இசைய வைத்தது. இதன்மூலம் உலக வர்த்தக அமைப்பில் 20 ஆண்டு காலமாக நீடித்துவந்த பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. தன்னை பாதிக்கக்கூடிய பிரச்னையில் இந்தியா உறுதியாக நின்று இந்த வெற்றியைப் பெற்றுள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
இந்த ஒப்பந்தத்தை, உலக வர்த்தக அமைப்பில் இடம் பெற்றுள்ள 160 நாடுகளில் மூன்றில் இரு பங்கு நாடுகள் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளிக்கும்போது, இந்த ஒப்பந்தம் தானாகவே உலக அளவில் அமலுக்கு வரும் என்று அவர் மேலும் தெரிவித்தார். ஒப்பந்த விவரம்: உலக வர்த்தக அமைப்பின் பொதுக் குழுக் கூட்டத்தில் இசைவு தெரிவிக்கப்பட்ட வர்த்தக இணக்க ஒப்பந்தத்தில் (டிஎஃப்ஏ) உள்ள சமாதான ஷரத்து மிக முக்கியமானதாகும். வளரும் நாடுகளின் உணவுப் பாதுகாப்புப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும்வரை, இந்த சமாதான ஷரத்து நீடிப்பதற்கு டபிள்யூடிஓ ஒப்புக்கொண்டுள்ளது. பொதுவாக, டபிள்யூடிஓ வர்த்தக நெறிமுறைப்படி எந்த ஒரு நாடும், அதன் உணவு தானிய உற்பத்தியில் 10 சதவீத அளவுக்கு மட்டுமே மானியம் வழங்க முடியும், பொது விநியோகத்துக்காகச் சேமித்து வைக்க முடியும். அதற்கு மேல் மானியம் வழங்கினாலோ, சேமித்து வைத்தாலோ, வர்த்தக உடன்பாட்டில் இடம்பெற்றுள்ள மற்ற நாடுகள் அதன் மீது அபராதம் விதிக்க முடியும். இவ்வாறு அபராதம் விதிக்கப்படாமல் இருக்க, சமாதான ஷரத்து வகை செய்கிறது. இதனைத்தான் காலக்கெடு இன்றி நீட்டிப்பதற்கு இந்தியா வலியுறுத்தி, அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் கோடி மதிப்புள்ள 6.20 கோடி டன் உணவுதானியங்களை பொது விநியோகத்துக்காகச் சேமித்து வைக்கும் இந்தியாவுக்கு, டபிள்யூடிஓ ஒப்பந்த விவகாரத்தில் கிடைத்துள்ள இந்த வெற்றி மிக முக்கியமானதாகும்.