இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக தன்னை மீண்டும் நியமிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சீனிவாசன் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தார்.ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் சீனிவாசனுக்குத் தொடர்பில்லை என்று முத்கல் ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் தெரிவித்ததையடுத்து, அவர் இந்த மனுவைத் தாக்கல் செய்தார்.இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக என் மீதான புகார்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்பதும், தவறான உள்நோக்கத்துடன் தெரிவிக்கப்பட்டவை என்பதும் ஆணையத்தின் அறிக்கை மூலம் நிரூபணமாகியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின்போது, 3 வீரர்கள் விதிகளை மீறியது தெரிந்தும் அவர்கள் மீது நானும் பிசிசிஐ அமைப்பைச் சேர்ந்த மற்ற அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பிசிசிஐயின் அப்போதைய தலைவர் பதவியில் சஷாங்க் மனோகர் இருந்ததால், என்னால் அந்த வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. எனினும், அந்தச் சம்பவங்களுக்கு சஷாங்க் மனோகர் நடவடிக்கை எடுத்தார். மேலும், ஐபிஎல் தொடரின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டது, முக்தல் ஆணையத்தின் விசாரணைக்குத் தடையாக இருந்தது உள்ளிட்ட புகார்களில் எனக்குத் தொடர்பு இல்லை என்பது தெளிவாகிவிட்டது. இந்நிலையில், தவறான, உள்நோக்கம் கொண்ட புகார்களால், ஏறத்தாழ எனது ஓராண்டு பதவிக்காலத்தை இழந்துவிட்டேன். எனவே, பிசிசிஐ தலைவராக என்னை மீண்டும் நியமித்து உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா சிமென்ட்ஸ் கோரிக்கை : இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சீனிவாசன் மேலும் ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்துக்கு பாதகமான எந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தாலும், அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த ஐபிஎல் தொடருக்கே பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்று சீனிவாசன் தெரிவித்துள்ளார்.