வசதி படைத்தவர்களுக்கு சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, தில்லியில் "ஹிந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதழ் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியதாவது:என்னைப் போன்றவர்கள் (வசதி படைத்தவர்கள்) எரிவாயு உருளைக்கான மானியம் பெறத் தகுதியுடையவர்களா? என்பதே இந்தியா அடுத்து எடுக்கவிருக்கும் முக்கியமான முடிவாக இருக்கும். இத்தகைய மானியங்களுக்கு யாரெல்லாம் தகுதி உடையவர்கள் என்று விரைவில் நாம் முடிவு எடுப்பது நமது அமைப்புக்கு நல்லது. இத்தகைய முடிவுகள், அரசின் செயல்திட்டத்தில் உள்ளன.அரசியல் தலைமையானது, குறிப்பாக பிரதமர், முடிவெடுக்கும் திறனைப் பெற்றிருந்தால் சிக்கலான முடிவுகளையும் எடுப்பது சுலபமாகிவிடும். நிலக்கரிச் சுரங்கங்கள் குறித்து முடிவெடுக்கவோ, அலைக்கற்றை அல்லது இயற்கை வளங்கள் அல்லது டீசல் விலை நிர்ணயம் போன்றவை குறித்து முடிவெடுக்கவோ இனி யாரும் ஆண்டுக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை.இவற்றில் சில முடிவுகள் கடந்த சில ஆண்டுகளாக சிக்கல் நிறைந்தவையாக இருந்தன. ஆனால், தற்போதைய மத்திய அரசு நேரத்தை வீணாக்காமல், இந்த விவகாரங்கள் தொடர்பாக எளிதாக முடிவெடுத்து விட்டது. இதேபோன்ற செயல்திட்டத்தை தொடர்ந்து பின்பற்றுவோம்.
இந்தியா தற்போது முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறது. உலகளாவிய முதலீட்டாளர்கள் நம் நாட்டை புதிய ஆர்வத்துடன் கவனிக்கின்றனர். சரக்கு, சேவை வரி தொடர்பான திட்டம் தயாரிக்கப்பட்டு விட்டது. இது தொடர்பான அரசமைப்புச் சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்படும் என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.