கேந்த்ரிய வித்யாலயப் பள்ளிகளில் மூன்றாவது மொழிப் பாடமாக ஜெர்மன் மொழி கற்பிக்கப்படுவதை ரத்து செய்தது குறித்து விளக்கம் அளிக்குமாறு, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜெர்மன் மொழிப் பாட ரத்தை எதிர்த்து, கேந்த்ரிய வித்யாலயப் பள்ளி மாணவர்களின் பெற்றோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தது. அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஒப்புக்கொண்ட நீதிபதி ஏ.ஆர்.தவே தலைமையிலான அமர்வு, வழக்கு விசாரணையை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. முன்னதாக, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ரீனா சிங் முன் வைத்த வாதம்: ஒரு மொழிப் பாடத்தை திடீரென்று மாற்றுவதால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கவனத்தில் கொள்ளாமலேயே பாடத்திட்டத்தில் இருந்து ஜெர்மன் மொழியை மத்திய அரசு நீக்கியுள்ளது.
மூன்றாவது மொழியைத் தேர்வு செய்யும் முடிவை, மாணவரிடமும், பெற்றோரிடமும் விட வேண்டும். அதற்கு மாறாக, மாணவர்கள் மீது எந்த முடிவையும் அரசு திணிக்கக் கூடாது. மேலும், ஒரு மொழிப் பாடத்தை மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும் வேளையில், கல்வியாண்டின் இடையில் எந்தப் புதிய உத்தரவையும் அரசு பிறப்பிக்கக் கூடாது. பாதிக்கப்படும் மாணவர்கள், அவர்களது பெற்றோரை கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாக, அவசர கதியில் மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்று ரீனா சிங் வாதிட்டார். "வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட சர்ச்சை': இதனிடையே, "கேந்த்ரிய வித்யாலயப் பள்ளிகளில் ஜெர்மன் மொழிக்குப் பதிலாக சம்ஸ்கிருதம் கற்பிக்கப்படும் என்று வெளியான தகவல் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட சர்ச்சை' என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கேந்த்ரிய வித்யாலயப் பள்ளிகள் அமைப்பு, ஜெர்மன் மொழி கற்பிக்கும் கோதே இன்ஸ்டிடியூட் ஆகியவற்றுக்கு இடையே கடந்த 2011ஆம் ஆண்டு கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துக்குத் தெரிவிக்கப்படவில்லை. மூன்றாவது மொழியாக, சம்ஸ்கிருதம்தான் கற்க வேண்டும் என்பதில்லை; வேறு எந்த இந்திய மொழியையும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கலாம். மாணவர்கள் விரும்பினால் தமிழ் மொழியைத் தேர்ந்தெடுக்கலாம். அவ்வாறு தேர்வு செய்தால், நிச்சயமாக, தமிழாசிரியர் ஒருவரை நியமிப்போம் என்று ஸ்மிருதி இரானி கூறினார்.