இந்தியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்தவிதமான நிபந்தனையையும் ஏற்க முடியாது என்று பாகிஸ்தான் அரசு வியாழக்கிழமை அறிவித்தது. பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி புதன்கிழமை தில்லியில் நடைபெற்ற இந்தியப் பொருளாதார மாநாட்டில் பேசியபோது, ""இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதை பாகிஸ்தான் நேர்மையாக அணுக வேண்டும். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராக உள்ளது. பாகிஸ்தான் அரசு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவது இந்தியாவுடனா? காஷ்மீர் பிரிவினைவாதிகளுடனா? என்றும், அதனை பாகிஸ்தான்தான் தேர்வு செய்ய வேண்டும்'' என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலக செய்தித் தொடர்பாளர் தஸ்னிம் அஸ்லாம் இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையானது இரு நாடுகளுக்கு மட்டும் சாதகமானதாக கருத முடியாது. இந்தப் பேச்சுவார்த்தையானது தெற்கு ஆசியப் பகுதியில் அமைதியை ஏற்படுத்துவதுடன், பொருளாதார வளர்ச்சியையும், அப்பகுதி மக்களின் நலனுக்கும் உகந்ததாக இருக்கும்.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் நாங்கள் எந்தவிதமான நிபந்தனையையும் ஏற்க மாட்டோம். காஷ்மீர் மக்கள் இந்தியப் பிரிவினைவாதிகள் அல்ல. அவர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் தங்களது உரிமைகளுக்காக போராடி வருவதை ஐ.நா.சபை தீர்மானம் அங்கீகரித்துள்ளது. இந்தப் பிரச்னையில் பாகிஸ்தானும் சம்பந்தப்பட்டிருப்பதால், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சரின் கருத்தை ஏற்க முடியாது. ஆப்கானிஸ்தான்-இந்தியா இடையே நடைபெறும் வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் ஒருபோதும் தடையாக இருக்காது. இதற்கு கராச்சி துறைமுகத்தை இந்தியா தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.