இந்தியா-இஸ்ரேல் இடையேயான உறவுகளை பலப்படுத்தும் நோக்கில், 2 நாள் சுற்றுப்பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இஸ்ரேல் சென்றடைந்தார். உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றப் பிறகு அவர் முதல் முறையாக வெளிநாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து இஸ்ரேல் சென்றடைந்த பிறகு சுட்டுரையில் (டுவிட்டர்) ராஜ்நாத் சிங் வெளியிட்ட செய்தியில், "இந்தியா-இஸ்ரேல் இடையே சுமுகமான நட்புறவு நீடித்து வருகிறது. அதை மேலும் வலுப்படுத்த விரும்புகிறோம். இதற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனும், முக்கிய தலைவர்களுடனும் பேச்சு நடத்த உள்ளேன்' என்று தெரிவித்துள்ளார்.
ராஜ்நாத் சிங்கின் இந்த சுற்றுப் பயணத்தின்போது தீவிரவாதத்துக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து போராடுவது, பாதுகாப்பு ஒத்துழைப்பில் இணைந்து செயல்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மொனாக்கோ நகரில் நடைபெற்ற சர்வதேச காவல் துறை அமைப்பான "இன்டர்போல்' அதிகாரிகளின் மாநாட்டில் அவர் கலந்துகொண்டார். இதன்பின்னர் டெல் அவிவ் சென்றடைந்த ராஜ்நாத் சிங்கை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் மோஷி யாலோன் உள்ளிட்டோர் வரவேற்றனர். இந்தச் சுற்றுயணத்தின்போது, பழமைவாந்த புனித நகரமான ஜெருசலேம், ஜோர்டான் பள்ளத்தாக்கு, வடக்கு, தெற்கு இஸ்ரேல் ஆகிய பகுதிகளுக்கு ராஜ்நாத் சிங் செல்ல உள்ளார்.