BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday, 4 November 2014

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மறைமுகப் போர்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் "பென்டகன்' அறிக்கை

இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகள் மூலம் மறைமுகப் போரில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகத் தலைமையகம் (பென்டகன்), அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. சர்வதேச மற்றும் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்து, அமெரிக்க நாடாளுமன்றத்தில் தனது அறிக்கைகளை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பென்டகன் தாக்கல் செய்வது வழக்கம். அந்த வகையில், கடந்த ஆறு மாத காலத்துக்கான 100 பக்கங்கள் கொண்ட அறிக்கையை, அமெரிக்க நாடாளுமன்றத்தில் பென்டகன் தாக்கல் செய்துள்ளது. அதில், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாத அமைப்புகள் செயல்படுவது தொடர்பான பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: ஆப்கானிஸ்தானில் அமைதியைச் சீர்குலைப்பதற்கும், பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு கேடு விளைவிக்கும் நோக்கிலும் ஆப்கானிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தான் மண்ணிலிருந்து செயல்படுகின்றன.

ஆப்கானிஸ்தானில் தான் இழந்த செல்வாக்கைத் திரும்பப் பெறுவதற்காகவும், இந்தியாவின் ராணுவ வல்லமைக்கு நேரடியாக ஈடுகொடுக்க முடியாததாலும் பயங்கரவாதிகள் மூலம் இந்த மறைமுகப் போரினை பாகிஸ்தான் தொடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானின் மறுசீரமைப்புக்கு உதவுவோம் என்ற உறுதிமொழிக்கு முரணாக, பயங்கரவாதிகளுடன் பாகிஸ்தான் உறவு வைத்துள்ளது. ஆப்கன்-பாகிஸ்தான் உறவில் இந்தப் பயங்கரவாத அமைப்புகள் நெருடலை ஏற்படுத்தி வருகின்றன. மோடிக்கு எதிர்ப்புத் தெரிவிக்க தாக்குதல்: கடந்த மே மாதத்தில் இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க சில நாள்களே இருந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஹிந்து தேசியவாத அமைப்பைச் சார்ந்தவர் என மோடி அறியப்படும் காரணத்தாலேயே, அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்தத் தாக்குதலை பயங்கரவாதிகள் அரங்கேற்றியுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இயங்கி வரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பே காரணம் என அமெரிக்க வெளியுறவுத் துறை கடந்த ஜூன் மாதமே தெரிவித்தது.

ஆப்கனுக்கு இந்தியா உதவி: பல்வேறு இடர்பாடுகளுக்கும் மத்தியில், ஆப்கானிஸ்தானின் மறுசீரமைப்புக்கு இந்தியா தனது பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் பாதுகாப்பும், ஸ்திரத்தன்மையும் உறுதிப்படுத்தப்படுவதே, அது சார்ந்த பிராந்தியத்துக்கும், மத்திய ஆசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் நன்மை பயக்கும் என்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது.இந்தியாவுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஆப்கானிஸ்தானில் சாலை மேம்பாடு, மின்சார உற்பத்தி, சுரங்கப் பணிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புப் பணிகளுக்கு இந்தியா சிறந்த பங்களிப்பை நல்கி வருகிறது.மேலும், ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புக்குத் தேவையான உதவிகளையும், அந்நாட்டின் பாதுகாப்புப் படையினருக்கு தனது நாட்டில் சில பயிற்சிகளையும் இந்தியா அளித்து வருகிறது.அதேசமயத்தில், ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு நேரடியாக எவ்வித உதவியையும், பயிற்சியையும் இந்தியா வழங்கவில்லை என பென்டகன் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"இந்தியாவின் கூற்று நிரூபணம்': பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் விளங்கி வருகிறது என்ற தனது நிலைப்பாட்டை பென்டன் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது என இந்தியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் செய்தியாளர்களிடம் செவ்வாய்கிழமை கூறியதாவது: அமெரிக்க நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகமான பென்டகன், தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளைக் கொண்டு பாகிஸ்தான் மறைமுகப் போரை தொடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் புகலிடமாக இருப்பதாக இந்தியா தொடர்ந்து கூறி வந்துள்ளது. இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை பென்டகன் அறிக்கை உறுதிப்படுத்திவிட்டது என அவர் தெரிவித்தார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies