இந்திய - பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள வாகா எல்லைச் சாவடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் 3 பேர் உள்பட 55 பேர் உயிரிழந்தனர். சுமார் 200 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண காவல் துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: இரு நாட்டு தேசியக் கொடிகளையும் இறக்கும் நிகழ்ச்சியைக் கண்டுவிட்டு ஏராளமானோர் அங்கிருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள நுழைவுப்பகுதி ஒன்றில் மர்ம நபர் ஒருவரை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அந்த மர்மநபர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.
இந்தத் தாக்குதலுக்கு, பெஷாவரில் கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த ஆண்டு தற்கொலைத் தாக்குதல் நடத்தி 78 பேரைக் கொன்ற அல்-காய்தாவுடன் தொடர்புடைய ஜந்துல்லா என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. வசிரிஸ்தான், ஜார்ப்-இ-அஜப் பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 20 வயது இளைஞர் ஒருவர், 25 கிலோ வரை வெடி பொருள்களை தனது உடலில் கட்டிவந்து வெடிக்கச் செய்தது தெரிய வந்துள்ளது என்றார் அவர்.