ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட 3 நாடுகளில், பிரதமர் நரேந்திர மோடி வரும் 11ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின்போது, அங்கு வரும் உலக நாடுகளின் தலைவர்களைச் சந்திக்க தான் ஆவலோடு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சுட்டுரை (டுவிட்டர்) சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது: பல்வேறு உச்சி மாநாடுகள், இருதரப்பு சந்திப்புகளில் பங்கேற்பதற்காக, வரும் 11ஆம் தேதி முதல் மியான்மர், ஆஸ்திரேலியா, ஃபிஜி ஆகிய நாடுகளில் நான் சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன். மியான்மர் சுற்றுப்பயணத்தின்போது, அங்கு நடைபெறவுள்ள ஆசியான், கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளேன். அந்த மாநாடுகளுக்கு வரும் உலக நாடுகளின் தலைவர்களைச் சந்திக்க ஆவலோடு இருக்கிறேன்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் உறவு மிகவும் ஆழமானது. ஆசியான் நாடுகளுடன் நமது உறவை வலுப்படுத்துவது "கிழக்கு நோக்கிய கொள்கை'யின் முக்கிய அம்சமாகும். இந்தியா முக்கியப் பங்காற்றக்கூடிய வகையில், இந்த நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டாக இருக்க வேண்டும் என்பது நமது கனவு. அந்தக் கனவை ஆசியான் மூலமாகத்தான் நிறைவேற்ற முடியும். இந்தச் சந்திப்புகள் நல்ல முறையில் அமையும் என உறுதியாக நம்புகிறேன். மியான்மர், இந்தியாவின் மதிப்புமிக்க நட்பு நாடாகும். அந்நாட்டுத் தலைவர்களுடன் இரு தரப்பு விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன்.
28 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் இந்தியப் பிரதமர் என்ற முறையில் எனது ஆஸ்திரேலியப் பயணமானது, மிகவும் சிறப்பு வாய்ந்தது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது, அந்நாட்டுத் தலைவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன். என்னை கௌரவிக்கும் விதமாக ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஜி20 நாடுகள் அமைப்பின் உச்சி மாநாட்டிலும் கலந்து கொள்ளவுள்ளேன். அப்போது, உலகப் பொருளாதாரம் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஜி20 நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆவலாக உள்ளேன். இதுபோல, ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியச் சமூகத்தினரையும் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.
கிரிக்கெட் விளையாட்டு என்பது இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் பொதுவான நாகரிகமாகி விட்டது. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியைத் தொடங்கி வைக்க எனக்கு அழைப்பு விடுத்துள்ள ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட்டுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலாவது உலகப்போரின்போது, இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் தோளோடு தோள் சேர்ந்து ஒரே அணியில் போரிட்டன. எனது ஆஸ்திரேலியப் பயணத்தின்போது அபோட்டுடன் போர் வீரர்களின் நினைவிடத்துக்குச் செல்லவுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார் மோடி.