இந்த ஆண்டுக்கான ஐசிசியின் ஒரு நாள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக தோனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால், டெஸ்ட் அணியில் இந்திய வீரர்கள் யாருக்கும் இடம் கிடைக்கவில்லை. ஐசிசி சார்பில் ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒரு நாள் அணி தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 2013 முதல் செப்டம்பர் 2014 வரையிலான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் ஒரு நாள், டெஸ்ட் அணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இந்த ஆண்டுக்கான அணிகள் விவரம் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. 12 பேர் கொண்ட ஒரு நாள் அணிக்கு தோனி கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விராட் கோலி, முகமது ஷமி ஆகியோரும் 11 பேர் கொண்ட அணியில் இடம்பிடித்துள்ளனர். ரோகித் சர்மா 12-ஆவது வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தோனி தொடர்ந்து 7-ஆவது முறையாக ஐசிசியின் ஒரு நாள் அணியில் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக 1-3 என டெஸ்ட் தொடரில் மோசமாக தோற்றதனால்தானோ என்னவோ, இந்திய வீரர்கள் யாரும் டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை. ஒரு நாள் அணி: (பேட்டிங் வரிசை) முகமது ஹஃபீஸ், குவின்டன் டி காக், விராட் கோலி, ஜார்ஜ் பெய்லி, டி வில்லியர்ஸ், தோனி (விக்கெட் கீப்பர், கேப்டன்), டுவைன் பிராவோ, ஜேம்ஸ் ஃபால்க்னர், டேல் ஸ்டெயின், முகமது ஷமி, அஜந்தா மெண்டிஸ். ரோகித் சர்மா.
டெஸ்ட் அணி: (பேட்டிங் வரிசை) டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், குமார் சங்ககரா, டி வில்லியர்ஸ், ஜோ ரூட், ஏஞ்சலோ மேத்யூஸ் (கேப்டன்), மிச்செல் ஜான்சன், ஸ்டூவர்ட் பிராட், டேல் ஸ்டெயின், ரங்கனா ஹெராத், டிம் செளதி, ராஸ் டெய்லர்.
ரசிகர்களின் மனம் கவர்ந்த புவனேஷ்வர்: இந்த ஆண்டுக்கான ரசிகர்களால் தேர்ந்தெடுக்கும் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தேர்வாகியுள்ளார். இந்த போட்டியில் அவர் தென் ஆப்பிரிக்காவின் ஸ்டெயினை பின்னுக்குத் தள்ளி, ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளார். 2010-இல் சச்சினும், கடந்த ஆண்டு தோனியும் இந்த விருதைப் பெற்றனர். இலங்கையின் சங்ககரா (2011,2012) தொடர்ந்து இரண்டு முறை இந்த விருதை வென்றுள்ளார்.