""சுவிட்சர்லாந்து நாட்டின், ஜெனீவா நகரில் உள்ள ஹெச்.எஸ்.பி.சி. வங்கியில் இந்தியர்கள் தொடங்கியுள்ள 600க்கும் மேற்பட்ட கணக்குகளில், பாதிக்கும் குறைவான கணக்குகளில் பணமில்லை'' என்று கருப்புப் பணம் தொடர்பாக விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது: கருப்புப் பணம் தொடர்பாக விசாரித்து வரும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.பி. ஷா தலைமையிலான குழு, மத்திய அரசிடம் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், ஜெனீவாவில் உள்ள ஹெச்.எஸ்.பி.சி. வங்கியில் இந்தியர்களால் தொடங்கப்பட்டுள்ள 628 கணக்குகள் அடங்கிய பட்டியல் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள கணக்குகளில் பாதிக்கும் குறைவான கணக்குகளில், அதாவது 289இல் எந்தப் பணமும் இல்லையென்றும், பட்டியலில் 122 கணக்குகள் இரு முறை திரும்பத் திரும்ப தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்றும் குழு தெரிவித்துள்ளது. அந்தக் கணக்குகள் எப்போது தொடங்கப்பட்டன? அந்தக் கணக்குகளில் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவர்த்தனை ஆகியவை தொடர்பான விவரங்கள் பட்டியலில் இல்லை. இந்த விவரங்கள் இல்லாதது, அதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பெரும் தடையாக இருக்கிறது. அந்தப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ள பெயர்களை கொண்டு, வருமான வரித் துறை 150 சோதனைகளை நடத்தியது. அவர்களுக்கு எதிராக ஆய்வும் நடத்தியது. ஆனால், அவர்களுக்கு எதிராக சட்டரீதியிலான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக இன்னும் முடிவெடுக்கப்படவில்லை.
உச்ச நீதிமன்றத்திடம் தற்போது அந்தப் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் வழக்கு முடிவடையும் தருவாயில் உள்ளது. அந்தப் பட்டியலில் உள்ள 300 பேரின் பெயர்களுக்கு எதிராக நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில நாடுகளுடன் இந்தியா செய்து கொண்டுள்ள இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தங்கள், வரி விதிப்பு தகவல்களை பரிமாறிக் கொள்ளும் ஒப்பந்தங்களை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது நீண்டகாலம் நடைபெறும் நடவடிக்கை என்றபோதிலும், தற்போதே அந்த நடவடிக்கையைத் தொடங்குவதன் மூலம் வெளிநாடுகளில் இந்தியர்கள் கருப்புப் பணத்தை பதுக்குவதைத் தடுக்க உதவும். இந்தக் கோரிக்கைக்கு, மத்திய அரசும் எஸ்ஐடிக்கு பதில் அளித்துள்ளது. அந்தப் பதிலில், 78 நாடுகளுடன் இந்தியா இதுதொடர்பான ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.
அதில், 75 நாடுகளுடன் மத்திய நிதியமைச்சகம் தனது பேச்சுவார்த்தையைத் தொடங்கி நடத்தி வருகிறது. தஜிகிஸ்தான், ஐஸ்லாந்து, மியான்மர் ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்பட்டு விட்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் தனது அறிக்கையில், பட்டியலில் இடம் பெற்றுள்ள நபர்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் தொடர்பு கொண்டு, சுவிட்சர்லாந்து வங்கியில் உள்ள அவர்களது கணக்குகள் குறித்த விவரங்களைக் கேட்க வேண்டும் என்றும், அவ்வாறு கணக்கு விவரங்களை அளிக்கும் நபர்களுக்கு கடுமையான தண்டனையில் இருந்து விலக்களிக்கப்படும் எனத் தெரிவிக்க வேண்டும் என்றும் எஸ்ஐடி மத்திய அரசுக்கு யோசனை கூறியுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.